Friday, December 19, 2014

மகிழ்ச்சியான தருணத்தில்

http://www.felixculture.in/climax/

மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன். “ஏன் இங்கே வந்தேன்? எதற்காக இங்கே வந்தேன்? போன்ற காரணங்களை ஆராய்வதை விட எனது மகிழ்ச்சி மிகவும் முக்கியமாக இருக்கிறது. இதுபற்றி பலமுறை சொல்லிருக்கிறேன். வீட்டில் தொலைக்காட்சியைத் தொலைத்தபோது ஒரு மகிழ்ச்சி. வீட்டிற்கு வரும் நண்பர்களுடன் முழு நேரமும் பேசிப்பேசி கழிக்கும் பொழுதுகள் ஒரு மகிழ்ச்சி.  ஒன்றுமே செய்யாமல் வெறுமன சுவரைப் பார்த்து கொண்டிருக்கும் பொழுதுகள் இன்னும் மகிழ்ச்சி, ஆடு கோழி, நாய் என அவற்றோடு சண்டையிட்டும், பிறகு கொஞ்சும்போதும் அவற்றோடு விளையாடும்போது ஒரு மகிழ்ச்சி என ஒவ்வொரு மகிழ்ச்சியையும் அனுபவித்து கொண்டிருக்கும்போது ஒரு நெருடல் மட்டும் இருந்துக்கொண்டே இருந்தது.
ஆம்… எதற்குமே உதவாத, ஒருவித பெரும் இடைவெளியையும், ஒரு போதையையும், ஒருவித அடிமைத்தனத்தையும், சலிப்பையும் எப்போது கொடுத்தாலும், மனம் அமைதி கொள்ளாது அதையே நாடும்போது ஒருவித பயம் என்னை கவ்விக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.  நண்பர்கள் எனச் சொல்லிக் கொண்டு பல விவாதங்கள், பல பரிமாற்றங்கள் என எல்லாவற்றையும் ஒரு குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும், எத்தனை எத்தனை முகம் தெரியாத மனிதர்கள். வெறும் சொற்கள் அதுவும் குப்பைச் சொற்கள், படங்கள், வீடியோக்கள் என உணர்வுகளை தூண்டிவிட்டு வெட்டியாய் வெறும் வீர வசனங்கள் பேசிப் பேசி திரியும் ஒரு இயந்திர மனிதர்களின் உணர்வுகள்.
“எனக்கு எதுவெல்லாம் தெரிகிறது பார், உனக்குத் தெரியாது என்றால் என்னிடம் கேள்,” என அறிவுகளைப் பரிமாறுதல்கள் மற்றும் அதற்காக தங்கள் முதுகில் தாங்களே தட்டு கொடுத்துக்கொள்ளுதல். முதலில் தனக்கு சொறிந்து கொள்ளுதல், பிறகு மற்றவர்களை சொறிய வைத்தல், சுகத்தை அனுபவித்துக் கொண்டு சொறிந்தவருக்கு மீண்டும் சொறிந்து விடுதல். இப்படியே சங்கிலித்தொடராய் இந்த இன்பம் தொடர்ந்து கொண்டே போகுகிறதே.  அதேபோல ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்திற்கும், ஒவ்வொரு வர்க்கத்திற்கும், ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு ஊருக்கும் என ஒவ்வொரு குழுக்கள் அதற்குள் அவர்களின் பெருமைகள் பேசும் வீண் சொற்கள்.  வெறும் சொற்கள். மாற்றான் உள்ளே வந்து ஏதாவது சொன்னால், அவன் மீது நடத்தப்படும் கொடுமையான சொல் தாக்குதல்கள் வன்மம், ஆபாசம், வக்கிரமாக என்றுதானே கழிகிறது.
இப்படியே பார்த்தால் உருப்படியாக ஒரு சில விஷயங்கள் கோடியில் ஒன்றிரண்டாக இருக்கிறது. அதற்குப் போதிய ஆதரவும் இருக்காது. அவை கேட்பாரற்று அநாதைகளாய் கிடைக்கும். அரசியல் நையாண்டிகள், கிரிக்கெட் பற்றிய விவாதங்கள், நடிக-நடிகைகளின் கிசுகிசுக்கள் அதிகமாக அலசி ஆராயப்படுகிறது. பிரபலங்களின் பக்கங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பலர் அங்கேயே தவம் கிடக்கிறார்கள். சில அறிவுஜீவிகள் இந்த இணைய மக்களால் பல வகையான புரட்சிகளை செய்யலாம் என கனவு கண்டுக்கொண்டிருக்கின்றனர். எங்கும் தகவல்கள் விரவி கொட்டிக் கிடைக்கிறது. ஒவ்வொருவரும் தகவல் புதையல்களை துழாவித் துழாவி எந்த செயலிலும் இறங்காமல் தங்களை வளப்படுத்தி கொள்கிறோம் என நினைத்து வதைத்துக் கொள்கிறார்கள்.
பிறந்த நாள், திருமண நாள், விழாக்கள், விருதுகள் வாங்குதல் மற்றும் பண்டிகைகள் என எல்லாவற்றுக்கும் குவியும் வாழ்த்துக்கள். இதுபோன்ற நிகழ்வுகளை மறந்திருந்தாலும் இந்த இயந்திரம் உங்களை இருக்க விடுவதில்லை.  இதில் உங்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி. இன்று இந்த நாகரீகத்தின் ஒரு உச்சகட்ட மகிழ்ச்சியாக இது தவிர வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
எல்லோரையும் போல தான் நானும் இந்த ஃபேஸ்புக்கில் நுழைந்தேன். பல பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் பழைய நண்பர்களில் பலர் உறவுநிலையில் பழைய நிலையில் இல்லை. சில நண்பர்கள் ஆச்சரியத்தை கொடுத்தார்கள், சிலர் அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். அமைதியாக அவற்றைப் பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் பலருக்கு நானும் ஆச்சரியங்களையும் அதிர்ச்சியையும் கொடுக்க வேண்டியதாய் போய்விட்டது.
கடந்த எட்டு மாதங்களாக கொஞ்சம் தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். அதன் நோக்கம் எனக்குள் இருந்த சிந்தனையை இறக்கி வைக்க ஒரு இடம் தேவைப்பட்டது என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. மேலும் அப்போது தெரிந்த இடமாக இந்த ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவு ஆகியவை இருந்தது. நேரம் கிடைக்கும்போது எழுதினேன். அது சிலருக்கு நன்றாக இருந்தது. பலருக்குத் தொந்தரவாக இருந்தது. ஒவ்வொரு மனிதர்களின் நினைத்தலுக்கும் பேசுதலுக்குமான இடையில் இருக்கும் சுவரில் இருக்கும் அழுக்கு, நாற்றம், வக்கிரம் ஆகியவை உடைத்தெறியப்பட்டு, முகமூடிகள் கிழிந்து, ஒப்பனைகள் கரைந்து போகும்போது அதிர்ச்சி அடைவது இயல்பு தானே. அதை ஏற்றுக்கொள்ள பலர் தயங்கினர். அதற்காக நான் எப்போதும் கவலைப்படவில்லை. மலத்தைப் பொட்டலம் போட்டு அதன் மீது வாசனைத் திரவியங்களை தெளித்து “அய்யா இதில் மதிப்புமிக்க பலப் பொருட்கள் இருக்கின்றன” என விற்கும் விற்பனையாளர்களையும் அந்த வாசனைத்திரவியம் தெளிக்கப்பட்ட மலமும் தானே எல்லோருக்கும் பிடிக்கிறது.
நான் ஒன்றும் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழுதவில்லை அல்லது யாரையும் குறைக்கூறவும் இல்லை. இதனை படித்துதான் இந்த உலகம் விழித்து அனைத்தையும் சரி செய்ய போகிறது எனவும் நினைக்கவில்லை. நான் செல்லும் பாதை தான் சரியானது என தர்க்கம் செய்யவும் வரவில்லை. ஆனால் ஒரு உண்மை மட்டும் எனக்கு நன்றாவே தெரியும் நான் வாழும் வாழ்க்கை என்பது ஒரு ஒருவழி (one way) பாதையில் உச்ச (peak hour) நேரத்தில் இருக்கும் போக்குவரத்தில் தெரியாமல் எதிர் திசையில் செல்லும் ஒரு ஒற்றை வாகனத்தின் நிலையாக தான் இருக்கிறது. எனவே இன்னும் கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் எனக்கு நல்லது என உணர்கிறேன்.  இது ஒரு போட்டியான உலகம், நான் போட்டியில் பங்கேற்கவும் நினைக்கவில்லை, பரிசுகளை அள்ளிச்செல்லவும் நினைக்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக நிறைய எழுதினேன். இங்கே எங்கள் ஊரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது, இன்னும் நின்றபாடில்லை. எனக்கு வெளியே பெரிய அளவில் வேலை எதுவும் இல்லை. ஆடுகளுக்கு தீவனம் அறுத்து கொடுக்கும் வேலையைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவ்வாறு கிடைத்த நேரத்தில் தான் பலப் பதிவுகள் எழுதப்பட்டன. இதுவரை உங்களுக்கு ஏற்றப்படி எதுவும் உருப்படியாக எழுதவில்லை. இயற்கை விவசாய முறைகள், நான் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் என விவசாயம் சார்ந்த பாடங்கள் எதுவும் எழுதவில்லை. அவற்றைக் கொஞ்சம் கூகுளில் தேடினால் நிறைய விஷயங்கள் கிடைக்கிறது. (இதையெல்லாம் தெரிந்து நீங்கள் என்ன பெரிதாக செய்ய போகிறீர்கள்?)
இங்கு நான் எழுதியது எல்லாம் மனித இனத்தின் ஆறாம் அறிவில் படிந்திருக்கும் மட்காத குப்பைகளை பற்றியதாகவே இருக்கிறது. தனிமனிதர்கள் யாரையும் தீண்டவில்லை. அப்படி யாரேனும் எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், உணவுப் பொருட்களின் இறக்குமதியும் அதற்கான அனுமதியையும் இந்த அரசாங்கங்கள் கொடுத்துவிட்டனவே என எதிர்க்கும் இந்த மனிதர்களை நினைக்கும்போது என்ன சொல்ல? அட வெட்கம் கெட்டவங்களா! உங்களின் மரபணு எவ்வளவு தூரம் மாற்றப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சுமார் 15 வருடங்களுக்கு முன் மொபைல் இருந்தால் தொந்தரவாக இருந்தது. ஏதாவது இன்கமிங் அழைப்பு வந்தால் நிமிடத்திற்கு 2 ரூபாய் போய்விடுமே என்ற பயம். ஆனால் இன்று ஒருவரிடம் மொபைலில் ஸ்மார்ட் ஃபோன் இல்லையென்றாலும், அது எங்காவது சார்ஜ் இல்லாமல் போய்விட்டாலும் உயிரே போனதுபோல எண்ணுகிறீர்களே. இணையமும், கூகுளும், ஃபேஸ்புக்கும் இல்லையென்றால் உங்கள் மொத்த சப்தநாடியும் அடங்கி விடும்போல இருக்கிறதே. இதிலெல்லாம் நாம் இயந்திரங்களுக்கு எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என ஒருநாளாவது சிந்தித்திருக்கிறோமா?
அதுமட்டுமா குழந்தைகளை வீடியோ சாட்டில் கொஞ்சிக் கொள்ளும் தந்தைகளும், தாத்தா-பாட்டிகளும் மற்றும் புகைப்படங்கள் வீடியோக்களை மட்டுமே பார்த்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் எண்ணற்ற குடும்பங்களும் என எவ்வளவு தூரம் பணம் என்ற ஒரு விஷயத்திற்காக உறவுமுறைகளின் நேரடி உணர்வுகள் இல்லாமல் ஒரு இயந்திரத்தின் வழியாகவும், அதற்குள்ளும் உங்கள்  உணர்வுகளை முடக்கி வைத்துக்கொண்டு உண்மை நிலையை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்களின் ஒட்டு மொத்தமாக மரபணு மாற்றப்பட்டுள்ளதே….
ஒரே வகை நிலமான காசும் காசு சார்ந்த நிலத்தில் ஏமாறுதல் மற்றும் ஏமாற்றுதல் (அதாவது சம்பாதித்தல் – செலவு செய்தல்)  என்ற வேலையைத் தவிர வேறு எதுவும் இல்லை என சுருக்கிய நம் இப்போதைய மரபணு பற்றி எழுதிக்கொண்டே போனால் எங்கே நிறுத்துவது என்பதே தெரியாமல் போய்விடும்.
பரபரப்பு செய்திகளை பார்த்து பார்த்து பழக்கப்பட்டவர்கள் “அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். “அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும்” என்ற திட்டமெல்லாம் என்னிடம் இல்லை. “எதையெல்லாம் இன்னும் நான் விடவேண்டும்” என்பதிலே தான் கவனமாக இருக்கிறேன்.
“அந்தப் பிரதிபலிப்பின் முன்நின்று
என் நிர்வாணத்தைப் பார்த்து இரசித்து கொண்டிருக்கிறேன்
‘நான்’ அத்தனை அழகு”
எனது மரபணுவை மீட்டெடுப்பதின் ஒரு சிறிய முயற்சியாக தான் தொலைந்து போன என் மரபணுவைத் தொலைத்த இடத்தில் தேடி போய் கொண்டிருக்கிறேன். (கண்டிப்பாக இங்கே இந்த கூகுளில் அது கிடைக்கப்போவதில்லை.)  எனவே அடுத்தக்கட்டமாக ஒரு பரிசோதனையாக ஜனவரி 1-இலிருந்து இந்தப் பக்கம் (ஃபேஸ்புக் மட்டும் எனது இணைய தளம்) வர மாட்டேன். இதனால் யாருக்கும் பெரிய அளவில் நட்டம் ஏற்படப்போவதில்லை என்பதையும் அறிகிறேன். அதற்கான ஒரு அறிவிப்பு என இதை எடுத்துக்கொள்ளலாம். (இப்படி அறிவிப்பதும் தேவையில்லை தான். யார் கேட்கப்போகிறார்கள்? அப்படியே கேட்டாலும் தக்க பதிலைத் தந்துவிட்டு கடந்து போய்விடலாமே). ஒரு முக்கியமான விஷயம் என் ஃபேஸ்புக் கணக்கை அழிக்கவோ, இணையத்தள கணக்கை அழிக்கவோ செய்யவில்லை. அது எவ்வளவு நாள் இருக்க முடியுமோ இருந்துவிட்டு போகட்டும். தானாக அழிந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. Creative Commons உரிமத்தில் எனது வலைப்பதிவு உள்ளதால் உங்களுக்கு என்ன செய்ய தோன்றுகிறதோ செய்து கொள்ளுங்கள். இனி அவை என்னுடையவை அல்ல. கடைசியாக நான் இந்த இணைய செயல்களை துறந்த விஷயமும் கூட ஆவணமாக்கப்பட வேண்டும் என்ற கடைசி விருப்பத்தில் தான் இதையும் எழுதியிருக்கிறேன். எனவே இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.
Disclaimer:
இதையெல்லாம் தாண்டி என்னைப் பார்க்க வேண்டும், என்னோடு பேச வேண்டும் என நினைத்தால் நேரில் வாருங்கள். உலகம் தான் மிகவும் சுருங்கிவிட்டதாக நீங்கள் பெருமையாக பேசுகிறீர்களே. நான் ஒரு கண்காட்சி பொருளுமல்ல, என் தோட்டம் சுற்றுலா தலமும் அல்ல என்ற நினைப்போடு வாருங்கள். என் மீது உங்களுக்கு அன்பு இருந்தால் என்னை முத்தமிடலாம். கோபம் இருந்தால் உங்கள் செருப்பாலும் அடிக்கலாம். இரண்டையும் வாங்க தயாராக இருக்கிறேன்

http://www.felixculture.in/climax/

No comments:

Post a Comment