காரைக்குடி விஷயம் உங்களுக்கு நிச்சயம்
தெரிந்திருக்கும். ஆனால் மதுரை விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்காது.
ஏனென்றால் அதில் ஒன்றும் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்பது தான் உண்மை.
அப்படி என்ன மதுரையில் நடந்தது...?
இந்த தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்ற ஒருவர் சிறையில்
''செக்கிழுத்தாரே'' அது உங்களுக்கு நினைவிருக்கிறதா...? இந்த தேசத்தை
அடிமைப்படுத்தி வெள்ளைக்காரர்களுக்கு போட்டியாக, தன் சொத்துக்களை எல்லாம்
விற்று கப்பல் வாங்கி விட்டாரே அவரை நினைவிருக்கிறதா...? இந்த தேசத்தின்
விடுதலைக்காக போராடிச் சிறைச் சென்று, பின் விடுதலை பெற்று வெளியே வரும்
போது, இன்று ஊழல் செய்து சிறை சென்று விடுதலையாகி வரும் போது பெருந்திரளாக
வந்து வரவேற்பது போல் அல்லாமல், தியாகி. சுப்பிரமணிய சிவா அவர்களால்
மட்டுமே வரவேற்கப்பட்டாரே.... அவரையாவது நினைவிருக்கிறதா...? இந்தக்
கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்... ''செக்கிழுத்தச்செம்மல்'' -
''கப்பலோட்டியத்தமிழன்'' என்றெல்லாம் இந்த தேசத்தின் விடுதலை வரலாறு வாயார
அழைத்ததே... அவர் தான் ''வ. உ. சி'' அன்று அழைக்கப்பட்ட ''வ. உ.
சிதம்பரம்'' ஆவார். இப்போதாவது இவரை நினைவுக்கு வந்ததா...?
அப்படிப்பட்ட மாமனிதனின் பேரப்பிள்ளைகள் இன்று வறுமையில்
வாடி நடுத்தெருவில் நிற்கிறார்கள். மதுரையில் வறுமையின் காரணமாக குடிசையில்
வாழும் வ.உ.சி. - யின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தனலட்சுமி, சங்கரன்,
ஆறுமுகம் ஆகிய மூவரும் வறுமையின் காரணமாக மதுரையில் தீர்த்தக்காடு என்ற
குடிசைப்பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் மூவரும்
வருமானத்திற்கும், சாப்பாட்டுக்கும் வழி தெரியாமல் தவித்தபோது, மதுரை
மாவட்ட ஆட்சியரை அணுகியபோது ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு தன் சொந்த
பணம் கொஞ்சமும், மாவட்ட நிதியிலிருந்து ரூ.5000 -த்தையும்,
தேசவுடமையாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 20,000 - த்தையும் ஏற்பாடு
செய்து அவர்கள் இட்லிக்கடை வைத்து பிழைப்பு நடத்த அந்த ஆட்சியாளர் உதவி
செய்திருக்கிறார்.
பெரும்
செல்வந்தரான வ. உ. சி, இந்த தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துக்களை
எல்லாம் துறந்து போராடினார். இந்த தேசம் விடுதலை பெற்றதில் மிகப்பெரிய
பங்காற்றியவர் வ. உ. சி., ஆனால் விடுதலைபெற்ற பின் இந்நாள் வரை இந்த
தேசமும், மக்களும், ஆட்சியாளர்களும் அவரை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டனர்.
அப்படித்தான், அவரது வாரிசுகளையும் இன்றைய ஆட்சியாளர்கள்
கண்டுகொள்ளாமலேயே. இருக்கின்றனர்.

No comments:
Post a Comment