Wednesday, February 01, 2017

வண்ணத்துப் பூச்சியிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமிருக்கு

Bergin G Kadayal

                    வண்ணத்துப் பூச்சிகள் பூக்களில் அமர்ந்து தேன் சேகரிப்பதை கவனித்திருக்கிறீர்களா? சத்தமில்லாமல் மெல்ல பறந்து வந்து மலர்களில் உட்கார்ந்து கொள்வதை கவனித்திருக்கிறிர்களா?. வினாடிக்கு 2 முதல் 12 முறை தன்னுடைய மெல்லிய சிறகுகளை மேலும் கீழுமாக அசைத்தாலும் அதனிடமிருந்து 1 டெசிபலுக்கும் குறைவான சத்தமே உருவாகிறது.சாதாரணமாக நீங்கள் கவனித்தால் அதன் சத்தம் நம் காதுகளிக்கு கேட்காது. மிகவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே நம் காதுகளுக்கு கேட்கும். எந்த சூழ்நிலையிலும் அது மலரை சேதப்படுத்தாது. வேகமாக பறந்து வந்தாலும் அவைகள் பூக்களில் அமர்ந்து கொள்வது மலர்களின் இதழ்களுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை. அவ்வளவு மென்மையாக அமர்கிறது. இன்னும் சொல்லப் போனால் வண்ணத்துப் பூச்சிகள் வருவது பூக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
வண்ணத்துப்பூச்சி பூக்களில் தேன் சேகரித்துக் கொண்டு செல்லும் போது தன்னை அறியாமல் ஒரு செயலையும் செய்கிறது. பூக்களில் ஒட்டியிருக்கும் மகரந்தங்களை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு பரிமாற்றம் செய்கிறது. உலகத்திலுள்ள உணவு உற்பத்தி மகரந்த சேர்க்கையைப் பொறுத்துத் தான் இருக்கிறது. மனிதர்கள் உயிர்வாழ தேவையான உணவுப்பொருட்களை தயாரிப்பதில் தனி பங்கு வகிக்கும் வண்ணத்துப் பூச்சி கூட சத்தமில்லாமல் பறக்கிறது. பூக்களை சிதைக்காமல் தனது உணவை சேகரிக்கிறது. தாவரங்களுக்கு தன்னாலான உதவியையும் செய்துவிட்டு போகிறது.
வண்ணத்துப் பூச்சி நமக்கு நிறய பாடங்களை கற்றுத் தருகிறது. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியோடு கொண்டாட கற்றுத் தருகிறது. செல்லும் இடங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக இருக்க கற்றுத் தருகிறது. யாரையும் காயப்படுத்தாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்று வாழ்ந்துகாட்டுகிறது. செல்லுமிடமெல்லாம் நம்மையும் அறியாமல் நன்மைகளை விதைத்துக்கொண்டே பயணப்பட கற்றுக்கொடுக்கிறது. ஒரிடத்தில் தேங்கியிருக்காமல் இந்த பரந்த உலகின் பல்வேறு அனுபவங்களை கற்றுக்கொள்ள கற்றுக்கொடுக்கிறது. எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்க கற்றுக்கொடுக்கிறது.
பறந்தாலும் அழகு. அமர்ந்தாலும் அழகு. வண்ணத்துப் பூச்சியை நினைத்துப் பார்த்தாலே அழகுதான். மற்றவர் நினைத்துப் பார்த்தாலே அழகான வாழ்க்கையை வாழ வண்ணத்துப் பூச்சியிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமிருக்கு.

No comments:

Post a Comment