கவியரசர் கண்ணதாசனும் "எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி... அங்கே எனக்கொரு இடம் வேண்டும்" என்று நாத்திகனாக இருந்தபோது கேட்டார். அவரே, ஆஸ்திகனாக மாறிய பிறகு "நெஞ்சுக்கு நிம்மதி... ஆண்டவன் சன்னிதி" என்றார். ஆம் நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் யார் யாருக்கு எங்கெங்கே கிடைக்கும். விதிவிலக்குகளை தவிர எல்லோரும் அமைதியை தேடி பயணிக்கிறவர்களாக தான் இருக்கிறார்கள். விதிவிலக்குகளை தவிர, மனிதர்கள் எல்லோருக்கும், எல்லாமே சரி வரத்தான் படைக்கப்பட்டுள்ளது - இறைவனால், (ஆத்திகர்களுக்கு) இயற்கையால் (நாத்திகர்களுக்கு)... அதில் அமைதியும் ஒன்று.
ஆனால் பாருங்கள். நமக்கு தான் அவை எங்கே உள்ளது என்று தெரியவில்லை அல்லது உண்மையான அமைதி, நிம்மதி எது என்பது புரியவில்லை. தினசரி இனிப்பை சாப்பிடுகிறவன், அது தான் இனிப்பு என்று தெரியாமல், இனிப்பு என்றால் வேறேதோ என்று தேடிய கதையாக நாம் அமைதியை தேடுகிறோமோ. சரியாக சொல்வதானால் - அமைதிக்கும், நிம்மதிக்கும் நாம் தான் காரணமாகிறோம். மன அமைதி, நிம்மதியின்மைக்கும் நாமே காரணமாகிறோம். எப்படி என்று பார்ப்போமா,ஒருவர் சொன்னார். "நா மகிழ்ச்சியாக இருக்கணும்னா - அந்த நடிகரோட நகைசுவை காட்சிய பார்ப்பேன்" என்று. ஆனால் நடிகரோ தன் மன அமைதிக்கு வேறு எதையோ நாடுகிறார். பிறருக்கு அவரால் நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அவருக்கு அவரால் நிம்மதியை தரமுடியவில்லை. பணம் கிடைத்தால் நிம்மதி என்று பணத்தை சம்பாதிக்க ஓடுகிறோம். வேலை கிடைத்தால் நிம்மதி என்று வேலையை தேடி ஓடுகிறோம். தேடியதெல்லாம் கிடைத்தது. ஆனால் அதன் மூலம் கிடைக்க வேண்டிய நிம்மதி நமக்கு கிடைத்திருக்க வேண்டுமே. கிடைக்கவில்லை. இன்னொருவருக்கு கோவிலுக்கு போனால் நிம்மதி கிடைக்கிறது என்று கோவிலுக்கு போகிறார். நிம்மதி பெறுகிறார். ஆனால் கடவுள் அருகே நாளெல்லாம் இருக்கும் அர்ச்சகரும், நிம்மதி இல்லாமல் தான் அலைகிறார்.
இரண்டு பேர் ஒரே இடத்தில் பணிபுரிந்தார்கள். இருவரும் ஒரே வகையான பணியில் இருந்தார்கள். ஒரே அளவு ஊதியம் பெற்றார்கள். ஒரே மாதிரியான மனநிறைவை, நிம்மதியை பெற்றார்களா. இல்லையே... ஒருவன் மனநிறைவு பெற்றான். மற்றவனோ திருப்தியின்மையில். ஏன். எல்லாமே முரண்பாடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ள சூழலில், கிடைக்கின்ற அமைதிக்கும், கிடைக்காத நிம்மதியும் முரண்கள் அற்று போகுமா.
நிம்மதியற்ற மனநிலையை ஒரு வியாதியாக பார்க்கிறோம். எந்த மருந்தை சாப்பிட்டால் நிம்மதி என்கிற குணமாதல் கிடைக்கும் என்று தேடுகிறோம்.
அமைதியின்மையை ஒரு வியாதியை போல் பார்க்க ஆரம்பித்தோமேயானால் அதற்கு மருந்தே கிடையாது. காரணம்... மருந்து என்று அறியப் படுவது நல்ல ஆலோசனையே. நபருக்கு நபர் அந்த மருந்தின் தேவையின் தன்மை மாறுபடுகிறது.
நிம்மதியை தேடி, காலங்காலமாகவே மனிதன் அலைந்து கொண்டு தான் இருக்கிறான். கற்கால மனிதனுக்கு நிம்மதியை தேட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. அன்று அவனிடம் போட்டி இருந்து இருக்காது. பொறாமை இருந்து இருக்காது. என்று மனிதன் தனக்கென்று ஒரு நாகரீகத்தை உண்டு பண்ணினானோ, என்று ஆசைப்பட ஆரம்பித்தானோ, அன்று முதல் நிம்மதியை தேடுகிறான். ஆனால் இன்று வரை அவனால் அறிய படாதவையாகவே நிம்மதி உள்ளது. இன்னும் தேடும் பொருளாகத் தான் நிம்மதி உள்ளது.
மது போதை நிம்மதியை தரலாம் என்று மதுவிற்கு அடிமையானான். ஆனால் அவன் தேடிய நிம்மதி கிடைத்ததா? மதுவினால் இருந்த சிறிதளவு நிம்மதியும் காணாமல் போனது. மாதுவிடம் நிம்மதி கிடைக்கும் என்று நம்பினான். அங்கே கிடைத்ததா? நிம்மதி என்றால் என்ன... நிம்மதி எப்படி இருக்கும். நிம்மதியின் விலை என்ன என்பதை எல்லா மனிதனும் அறிந்து இருக்கிறானா...
ஆரம்பத்தில், அதாவது குழந்தை பருவத்தில் மனது, மழை நீரை போல் தெளிவானதாக உள்ளது - எந்த அழுக்குமில்லாமல். காலம் செல்ல செல்ல ஒவ்வொரு விதமான அழுக்கும் வந்து சேர்ந்து, நீர் அசுத்தப்படுகிறது. அசுத்தமான நீரை பழைய நிலைக்கு கொண்டு வர நினைத்தால் முடியுமா... முயற்சித்து கொண்டே இருக்க வேண்டியது தான். நிச்சயம் சுத்தப்படுத்தவே முடியாது. ஆரம்பத்தில் இருந்தே நீரை சுத்தமாக வைத்து இருந்து இருக்க வேண்டும். அதாவது மனதை... தெளிந்த நிரோடையாக இருந்த மனது, ஒரே நாளில் அமைதியை இழந்து வாடத் துவங்குவதில்லை.
தெரிந்தோ, தெரியாமலோ செய்கின்ற ஒவ்வொன்றின் விளைவுகளே, நம் நிம்மதியின்மைக்கும், அமைதியை தேடும் மனநிலைக்கும் காரணமாகிறது. நமது சுபாவத்திற்கும் நிம்மதியின்மைக்கும் மிக பெரிய தொடர்புள்ளது. அமைதியை தேடும் ஒவ்வொரு மனிதனையும் உற்று கவனித்தால், அவன் தன்னை பற்றி மிக பெரிய கற்பனையில் இருக்கின்றவனாக இருப்பான். எளிமையாக வாழுபவர்கள் அமைதி எங்கே என்று தேட மாட்டார்கள். நிம்மதி குறைவுக்கு எதெல்லாம் காரணமாக இருக்க போகிறதோ - அதை ஆரம்பத்திலிருந்தே விலக்கியவர்களாக இருப்பார்கள்.
உலகில் மிக பெரும்பாலானவை எல்லாமே சுலபமாக கிடைக்கவே வழி அமைக்கப்பட்டுள்ளது - நாம் தான் நம் பழக்க வழக்கங்களால் கடுமையாக்கி கொண்டுள்ளோம். அதில் அமைதியும் ஒன்று. அமைதியை தேடுபவர்கள், தங்களை முற்றிலுமாக மாற்றி கொண்டால் - அமைதியை பெறலாம். அமைதியை தேடுபவர்கள் அதை பரிட்சித்து பார்க்கலாம்.
நன்றி : http://tamiluthayam.blogspot.com/2010/12/blog-post_16.html

No comments:
Post a Comment