https://vishnuvaratharajan.blogspot.ae/2017/05/blog-post.html?m=1
இராட்டையும் ரோஜாவும்
10/05/17 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் நவின் ஜோஷி தொகுத்த “The Charkha and The Rose" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனக்கென்று தனித்த ஆளுமை இல்லாத, முழுக்க முழுக்க காந்தியின் நிழலில் வளர்ந்தவர் நேரு என்று ஒரு புறமும், இத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தும் காந்தி நேருவைத் தலைமைப் பொறுப்புகளுக்கு முன்மொழியக் காரணம் அவரை ஆரம்ப காலத்தில் மோதிலால் நேரு ஆதரித்ததுதான் என்று மற்றொரு புறமும் தொடர்ந்து மேம்போக்கான வாதங்கள் பொதுவாக வைக்கப்படுகின்றன. ஆனால் காந்தி, நேருவுக்கு இடையேயான உறவு என்பது எவ்வாறு தொடர்ந்த உரையாடல்களால் கருத்து வேற்றுமைகளுக்கு இடையே செதுக்கப்பட்டது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. இது ஒரு ஆய்வு நூல் அல்ல; காந்தி நேரு தொடர்புடைய இருவரின் பேச்சுகள், புத்தகங்கள், கடிதப் பரிமாற்றங்கள், நாளிதழ் செய்திகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், தலையங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். திரு.ஏ.பாஸ்கர் அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை என் நினைவில் உள்ளவரை, என் புரிதலையும் இடையிடையே நுழைத்தபடித் தருகிறேன்.
முன்குறிப்பு 1: காந்தி-நேரு இடையேயான தனிப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே அமைந்திருக்கின்றன. ‘You' என்று காந்தி உபயோகித்த சொல் ‘நீ’ என்று குறிக்கிறதா அல்லது ‘நீங்கள்’ என்று குறிக்கிறதா என்று தெரியவில்லை. கிட்டதட்ட தந்தை-மகன் உறவு இருவருக்குமிடையே இருந்திருக்கிறது; காந்தியும் மிக உரிமையோடு நேருவின் குடும்ப விஷயங்களில் கருத்து தெரிவித்திருந்திருக்கிறார். அவற்றை வைத்து பாஸ்கர் ‘you' என்பதை ‘நீ’ என்றே மொழிபெயர்த்திருந்தார். அதை அப்படியே இங்கும் பின்பற்றியிருக்கிறேன். மோதிலால் நேருவாகட்டும், ஜவகர்லால் ஆகட்டும், இந்திரா காந்தியாகட்டும், கமலா நேருவாகட்டும், அனைவரிடமும் ஒரே அன்போடும் உரிமையோடும் காந்தி உரையாடியிருக்கிறார்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களோடு காந்தியால் ஒரே அலைவரிசையில் உரையாட முடிந்திருக்கிறது.
முன்குறிப்பு 2: காந்தி, நேரு இருவரும் ஆங்கில மொழியில் அதீத ஆளுமை பெற்றவர்கள். அவர்களின் கடிதங்கள் உயர்தர ஆங்கிலத்தில் பொட்டில் அடித்தாற்போல் இருக்கும். தமிழில் அவற்றை மொழிபெயர்க்கும்போது கடிதத்தின் சாரம் சற்றே மழுங்கிப் போவதைத் தவிர்க்க முடியாது என்று பாஸ்கர் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அதையே இங்கும் சொல்லிக் கொள்கிறேன்.
நேருவுக்கும், காந்திக்கும் இருந்த உறவின் ஆழத்தை, அவர்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்கள், உரையாடல்கள் ஆகியவற்றை புலப்படுத்தும் 'CHARKHA AND THE ROSE' நூலிலிருந்து சில பகுதிகள்:
* ஒரு முறை நேருவின் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஒரு நாளிதழில் அச்சடிக்கப்பட்டுவிடுகிறது. காந்தி யங் இந்தியாவில் எழுதுகிறார், “சமயங்களில் என் பேச்சே என் நாளிதழில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிடுகிறது. அவ்விஷயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் நம்மை விட கவனமாக இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இப்படித் தவறாக அச்சடிக்க முதலில் இந்தப் பேச்சுகளை ஏன் அச்சடிக்க வேண்டும்? எதிர்காலத்தில் பேச்சாளர் அந்தப் பேச்சில் திருத்தம் செய்தால் அப்பொழுது மட்டும் அதைக் குறிப்பிட்டு பிரசுரிக்கலாம்”.
* 1922-ல் சௌரி சௌரா நிகழ்விற்காக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதற்கு காட்டமாக அதிருப்தி தெரிவித்த பலருள் நேருவும் ஒருவர். “அம்மக்களையே அறியாமல் அந்நிகழ்வு வன்முறைப் பாதையில் முடிந்துவிட்டது; அதற்காக மொத்த இயக்கத்தையும் நிறுத்துவது எப்படி சரியாகும்”, என்று சிறையில் இருந்தபடி நேரு காந்திக்குக் கடிதம் எழுதுகிறார், அதற்கு காந்தி, “நீ சிறைக்கு உள்ளே இருக்கிறாய்,அதனால் நிலைமையை உன்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம்; ஆனால் நான் வெளியே இருக்கிறேன், என்னால் நிலைமையின் தீவிரத்தை உணர முடிகிறது.”, என்று பதிலளித்தார். பின்னாளில் தன் சுயசரிதையில் நேரு சௌரி சௌரா குறித்து சொல்கிறார். காந்தி உட்பட யாருமே முன்வைக்காத பார்வை அது. “வன்முறை நிகழ்ந்ததால்தான் காந்தி பின்வாங்கினார் என்று பலரும் சொல்கிறார்கள். எனக்குக் கூட காந்தி மீது கோபமும் வருத்தமும் இருந்தது. ஆனால் காந்தி தன்னுடைய ஆழ்மனது உணர்த்திய அறிவை சார்ந்தே செயல்பட்டிருக்கிறார். இந்நாட்டின் நாடித் துடிப்பை அறிந்தவர் அவர். ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் எண்ண ஓட்டமும் காந்திக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தான் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.”, என்கிறார் நேரு. அதாவது மக்கள் வன்முறையை விரும்பிவிட்டார்கள் என்று காந்தி பின்வாங்கவில்லை, மாறாக அவ்வன்முறை மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது; அதன் அடிப்படையிலேயே அகிம்சைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று காந்தி பின்வாங்கினார், என்று பதிவு செய்கிறார் நேரு.
* 1920-கள் நேருவுக்கும் கருத்து வேறுபாடுகள் பெருமளவில் இருந்த காலகட்டம். ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்க சிலர் காந்தியை அணுகியிருந்தார்கள். தன்னால் வர இயலாது என்று கூறிய காந்தி, “இதற்கு என்னால் நேருவை மட்டுமே பரிந்துரைக்க முடியும்; நேருவை மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது. ஏனெனில் எனக்குத் தெரிந்து இந்தியாவில் உள்ள உண்மையான மனிதர்களுள் நேருவும் ஒருவர்”, என்றார். ...
* ஜவகர்லால் நேரு அடுத்த தலைவராக வரவேண்டும், இளைஞர்கள் முன்வந்து காங்கிரசைப் புத்துணர்வு பெறச் செய்யவேண்டும், என்று இயக்கத்திற்குள் குரல்கள் வலுப்பெறத் துவங்கியிருந்தன. 1928-ல் அப்பொழுது காங்கிரஸ் தலைவராக இருந்த மோதிலால் நேரு இது சரி வருமா என்று காந்தியிடம் தன் தயக்கத்தை வெளிப்படுத்தினார்.
அதற்கு காந்தி, “ஜவகர்லால் தலைவராக ஆவதில் எனக்குக் கருத்து வேற்றுமை இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் மதவாதம் தலைதூக்கியிருக்கிறது; நம் இயக்கத்தவரே மாற்று வழியில், வன்முறைப் பாதையில் ஈடுபாடு கொள்ளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் காங்கிரசை வழிநடத்த ஜவகர்லால் சிறந்த தேர்வாக இருக்கும் பட்சத்தில் அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவராக ஜவகர்லால் தேர்வு செய்யப்பட்டால், அங்கு தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்குத்தான் தன் முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும்; அந்தப் பொறுப்பை வைத்துக்கொண்டு நாட்டிற்குப் பெரிதாக சேவை செய்துவிட முடியாது; அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்”, என்றார்.
காந்தி அனைத்துக் கடிதத்தையும் முடிக்கும்போது நல்லவிதமாகத்தான் முடிப்பார்; நம்பிக்கையை ஏற்படுத்தும் முனைப்பு அதில் தெரியும். இதிலும் அப்படித்தான் இருக்கிறது. “காங்கிரசுக்குள் தலைதூக்கியிருக்கும் மதவாதம் நிச்சயமாக ஓய்ந்துவிடும்; அப்பொழுது அவர்களுக்கே ஒரு ஒழுக்கவாதி தேவைப்படுவார், அப்பொழுது ஜவகர்லால் அத்தேவையைப் பூர்த்தி செய்வார்”, என்று அக்கடிதத்தை முடிக்கிறார் காந்தி.
“என் கருத்துகளுக்கு எதிராக மட்டுமல்ல, எனக்கு எதிராகவும் நீ வெளிப்படையாக யுத்தம் நடத்தவேண்டும். ஏனென்றால், ஒருவேளை என் பக்கம் தவறு இருந்தால் அது தேசத்திற்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிடும். நீ என்னோடு யுத்தம் செய்வதன்மூலம் என் தவறுகளை என்னால் திருத்திக்கொள்ளமுடியும்; அதன்மூலம் தேசத்தை அபாயத்திலிருந்து காக்கலாம்”, என்று எழுதுகிறார். இங்கு காந்தி ‘அபாயம்’ என்றும், ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்றும் குறிப்பிடுவது தான் முன்வைக்கும் அகிம்சைக்கு மாற்றான வன்முறையைப் பாதையின் விளைவுகளையே.
காந்தி மேலும் எழுதுகிறார், “என் முடிவுகளில் உனக்கு சந்தேகம் இருக்குமானால், அதை நிவர்த்தி செய்வதற்குக் கூட எனக்கு எதிராக நீ யுத்தம் நடத்தலாம். ஏனென்றால், காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருக்கும்போது நீ சந்தேகத்துடன் செயல்படக்கூடாது. அந்த அவசியத்தின் பொருட்டு நீ என்னோடு வெளிப்படையாகவே யுத்தம் புரிய வேண்டும், அது உன் கடமையும் கூட”, என்கிறார். இவ்வாறு காந்திக்கும் நேருவுக்கும் இடையே நிகழ்ந்த கருத்து மோதல்கள் அவர்களின் கடிதங்களிலும் எதிரொலிக்கிறது.
காந்தி மிக முக்கியமான ஒரு கருத்தை அக்கடிதத்தில் பதிவு செய்கிறார். “நமக்கிடையே இருக்கும் வேற்றுமைகள் அதிகமாகவும் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன. என் நெஞ்சத்தில் அதனால் ஏற்பட்ட துக்கத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. இதனால் ஒரு உண்மையான, நம்பிக்கையுள்ள, திறமையான, ஒரு தோழமையை நான் இழந்துவிடுவேனோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.”, என்கிறார். இதிலும் நேர்மறையாகவே கடிதத்தை முடிக்கிறார். “தோழமையை இழந்தாலும் பரவாயில்லை, ஏனெனில் நம் நோக்கங்கள் எல்லாவற்றைவிடவும் உயர்வானது. நம்மிடையே தோழமை உணர்வு பாதிக்கப்பட்டாலும், நம் தனிமனித நெருக்கத்தை அது பாதிக்காது”. நம் தோளோடு தோள் நின்று போராடும் தோழனாக ஒருவன் இருந்தால் மட்டுமே அவன் நெருக்கத்தை நம்மால் விரும்ப முடியும் என்பதை காந்தி மறுக்கிறார்.
இதுவேறு அதுவேறு என்று தெள்ளத் தெளிவாக காந்தி அன்பை முன்னிலைப்படுத்திய தருணம் அது. “நாம் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அது எத்தகையது என்றால், லால் பகதூர் சாஸ்திரிக்கும் எனக்குமான நெருக்கத்தைப் போன்றது. எங்கள் வேற்றுமைகள் எங்களுக்குத் தெரிவதற்கு முன்னால் எங்களிடையே இருந்த பரஸ்பர அன்பு எப்படி இப்போதும் இருக்கிறதோ, அவ்வாறே நாமும் இருப்போம்”.
.
.
* அதே வருடம் ஜூன் மாதத்தில் சபர்மதியிலிருந்து காந்தி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கடிதத்தை நேருவுக்கு எழுதுகிறார். “நீ சொன்னவற்றோடு எனக்கும் ஒத்த கருத்து இருக்கிறது. ஒரு நாள் இக்காங்கிரஸ் இயக்கம் செல்வந்தர்களும் செல்வாக்குள்ள படித்தவர்களும் இல்லாத ஒரு தீவிரமான இயக்கமாக உருவாக வேண்டும்”, என்கிறார். அதாவது காந்தி காங்கிரசைப் புணரமைப்பு செய்த பின்னும் பெரும்பாலும் செல்வந்தர்களும் படித்தவர்களும்தான் இன்னும் தீவிரமாக இயங்குகிறார்கள் என்றும், அவ்வியக்கத்தை இன்னும் மக்கள் நோக்கி செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றும் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பாமர மக்களின் மீது முன்முடிவான, கீழானதொரு கருத்து இல்லாமல், அவர்களாலும் ஜனநாயகத்தை உயிர்த்திருக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருவரிடமுமே வெளிப்படுகிறது.
* 1929-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்ட பின், சில நாட்களிலேயே அவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் செல்கிறது. அலகாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்ற வேளையில் நேரு எழுதுகிறார், “உலகத்திலேயே கடினமான பொறுப்பு காங்கிரஸின் தலைவராக இருப்பதுதான் என்று இப்பொழுது புரிகிறது. மதன் மோகன் மாளவியா போன்றவர்களின் கொள்கைகள்தான் காங்கிரசின் கொள்கை என்றால், எனக்கு இங்கு வேலை செய்வது கடினம். அவர்களோடு கருத்து ரீதியாக முரண்பட்டுக்கொண்டே தலைவராகவும் இயங்குவது என்பது என்னால் முடியாத காரியம். இப்படி அனைவரையும் இணைத்துக் கொண்டு செல்ல உங்களால் மட்டுமே முடியும். நீங்களே தலைவர் ஆகிவிடுங்களேன்”, என்று அதில் எழுதப்பட்டிருந்தது. நேருவுக்குப் பொறுமையாகக் கடிதமும் எழுதுகிறார் காந்தி. “தற்பொழுது எவராலும் இந்தப் பொறுப்பை உன்னைப் போல் சிறப்பாக ஏற்க முடியாது, ஏனெனில் இக்கிரீடம் ரோஜாக்களால் ஆனவை அல்ல; முற்களால் ஆனவை”, என்று அன்புக் கட்டளை இடுகிறார்.
* 1933-ல் ஒரு நேர்காணலில் காந்தியிடம் ‘நேருவின் பொதுவுடைமை சார்ந்த கொள்கைகளால் காங்கிரசுக்குக் கம்யூனிச சாயம் வந்துவிட்டதா’ என்று கேட்கிறார்கள். “காங்கிரசின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுதான் நேரு அதன் தலைவர்களுள் ஒருவராக ஆகியிருக்கிறார். அவர் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், ஆனால் அதே நேரத்தில் அதை இந்தியாவின் சூழ்நிலைக்கேற்ப அவர் இன்னும் தகவமைக்கவில்லை; அதை நோக்கி அவர் சென்றுகொண்டிருக்கிறார்”, என்கிறார். அடுத்த ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் எடுத்த நேர்காணலில் ‘காங்கிரசுக்குள் சோசியலிச குழு ஒன்று நுழைந்திருக்கிறதே’ என்ற கேள்விக்கு, “அதை நான் வரவேற்கிறேன். அது சிறப்பாக செயல்படுமேயானால், தேசத்தின் பண்புகளையும் சூழல்களையும் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுடன் இயங்கி நன்மையையே செய்யும்.”, என்கிறார் காந்தி.
1936-ல் “நேருவின் சொற்பொழிவுகள் விஞ்ஞான சோசியலிசத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் என்னை அது பாதிக்கவில்லை. அவர் ரஷ்ய மாதிரியை ஆதரிக்கவில்லை; அவர் அதை ஆதரிக்கிறார் என்பது பொய். ஆனால் இந்தியாவின் தேவைகளுக்கேற்ப அதை அவர் தகவமைக்க முற்படுகிறார் என்பது உண்மை. அதை நான் எதிர்க்கவில்லை.
எந்த முறையில் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன; ஆனால் அதை வைத்து எங்களை எதிரெதிர் துருவங்களாக சித்தரிக்க முற்படுவது கேலிக்குரியது. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் எங்களிடையே நடந்த கடிதப்போக்குவரத்தின் மூலம் பலவற்றை நாங்கள் சரி செய்துகொண்டு விட்டோம். இருந்தாலும், சில வேளைகளில் வெவ்வேறு பாதைகளில் நாங்கள் பயணித்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவே முடியாத நிலை ஏற்பட்டாலும், எங்களிடையே உள்ள பரஸ்பர அன்பு உடனடியாக எங்களை ஒன்று சேர்த்துவிடும்”, என்கிறார் அழுத்தமாக.
* 1942-ல் காங்கிரஸ் காரிய கமிட்டியில் வார்தாவில் கூடியது. அங்குதான் காந்தி தன்னுடைய அரசியல் வாரிசாக நேருவை அறிவிக்கிறார். “என்னுடைய வாரிசு ராஜாஜி கிடையாது, ஜவகர்லால் நேருவே என்னுடைய வாரிசு. இப்பொழுது நான் என்ன செய்கிறேனோ, அதை எனக்குப் பிறகு அவர் தொடர்வார். அந்த வேலையைத் தொடர்வது மட்டுமல்ல, நான் பேசுகின்ற மொழியிலேயே அவரும் பேசுவார்”, என்கிறார் காந்தி.
வெறுப்பு விதையை ஜின்னா ஆழமாகத் தூவ ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தேசம் வன்முறையால் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருந்தது. மேலும் பெண்களையும் ஒடுக்கப்பட்டோரையும் சமமாக, சக மனிதர்களாகப் பாவிக்கும் இந்திய சமூகத்தை உருவாக்கும் அவசியம் இருந்தது. அதுவும் வெவ்வேறு அடையாளங்களையும் கலாசாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தியாவை ஒற்றுமையாக வைத்துக்கொண்டே அந்த சாகசத்தைப் புரிய வேண்டியிருந்தது.
எனவே அனைவருக்கும் பிடித்தமான, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஜனநாயகவாதியான நேருவாலேயே இத்தேசத்தை ஒன்றுபடுத்தி, அதில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியப்படுத்த முடியும் என்பது காந்தியின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. பிரிவினை காலகட்டத்தில் நேருவையும் கொல்ல முயற்சி நடந்ததை இதனுடன் இணைத்துப் பார்க்கவே வேண்டியிருக்கிறது.
* ஒரு புறம் இயக்கத்திற்காக, குறிக்கோளுக்காக உழைத்தபடி இருக்கும் காந்தி, பொது வாழ்வைத் தாண்டி தனி மனித அளவிலும் பலரிடம் நெருக்கம் பாராட்டுகிறார். குடும்ப உறுப்பினரைப் போல் இதைச் செய் அதைச் செய் என்று ஆலோசனை கூறுகிறார். மோதிலால் நேருவிடம், “ஜவகர்லால் பற்றி வருந்தத் தேவையில்லை”, என்கிறார். ஜவகர்லாலிடம், “வேலையை விட்டுவிட்டு அப்பாவின் காசில் சாப்பிடுவதாக நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாயா?”, என்று கேட்கிறார். கமலா நேருவின் உடல்நலத்தை ஒழுங்காக கவனித்துக்கொள் என்கிறார், ர்.
* நேரு தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு எழுதுகிறார். “ஒரு நோக்கம் எவ்வளவு பெரிதானதாக இருந்தாலும், அது தெளிவற்றதாக இருந்தால் காந்தி அதன் பக்கம் செல்ல மாட்டார். அதே நேரத்தில் ஒரு நோக்கம் மிகக் குறிப்பாக, நிச்சயமாக அடையக்கூடியதாக இருப்பின், அது எவ்வளவு சிறிதாக இருப்பினும் காந்தி தன் முழு கவனத்தையும் அதில் செலுத்துவார்.”, என்கிறார். “தேச விடுதலையோடு தொடர்பில்லாத சில விஷயங்களில் காந்தி தலையிட்டது முதலில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அவற்றின் பின்புலத்தில் இருந்த சமூக நுணுக்கங்களை என்னால் முதலில் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. பிறகுதான் அவற்றைப் பற்றிய தெளிவு வந்தது”, என்று பதிவு செய்கிறார்.
* “காந்தி காங்கிரசுக்குள் வந்ததும் அதன் அமைப்பு விதிகளை முற்றிலுமாக மாற்றினார். காங்கிரஸ் இயக்கத்தை ஜனநாயகப்படுத்தி அதை ஒரு வெகுஜன இயக்கமாக காந்தியடிகள் உருவாக்கினார். எப்போது அவர் இந்திய அரசியல் அரங்கில் நுழைந்தாரோ, அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய பிரபலம் எக்காலகட்டத்திலும் இம்மியளவும் குறையவேயில்லை, மாறாக அதிகரித்துக்கொண்டேதான் சென்றது. இனியும் அவரின் பிரபலம் மக்களிடையே வளர்ந்துகொண்டுதான் செல்லும்”, என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார் நேரு.
“காந்தியைப் போல் இந்தியாவின் மூலை முடுக்குகளெங்கும் பயணித்த தலைவர் வேறு யாரும் கிடையாது. அவர் ரயிலில் சென்றிருக்கிறார், காரில் பயணித்திருக்கிறார், எங்கு சென்றால் மக்கள் அகிம்சைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று ஒரு பிச்சைக்காரனைப் போல் வீடு வீடாக, கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்திருக்கிறார்”.
தமிழில்: வ.விஷ்ணு
முழுமையாக படிக்க https://vishnuvaratharajan.blogspot.in/2017/…/blog-post.html

No comments:
Post a Comment