அம்பேத்கர் -காந்தி குறித்து ஆனந்த் பட்டவர்த்தன்
(எழுத்தாளர் அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் குறிப்புகள் - 7.4.2017)
நான் எவ்வாறு காண்கிறேனோ அதே வடிவில் உண்மையைப் பேச வேண்டும். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான வேற்றுமைகளைக்காட்டிலும் ஒற்றுமைகளே அதிகம் என்பதை நான் எப்போதும் உணர்ந்து வந்துள்ளேன். அவர்கள் இருவரின் இதயங்களும் சமத்துவமும், மனிதாபிமானமும் நிரம்பி வழிபவையாக இருந்தன.நான் சொல்பவை இன்றைய சூழலில் எனக்குப் புகழ் சேர்க்காமல் போகலாம். ஆனால் நான் ஒன்றைச் சொல்ல முடியும். எல்லாவிதமான முன் அனுமானங்களையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு முறியான வரலாற்ரு ஆய்வுக்குத் தயாராக உள்ள யாரும் இந்தக் கண்ணோட்டத்தையே வந்தடைய முடியும். காந்தி கண்டடைந்த 'சத்தியாக்கிரகம்' என்கிற கருத்தாக்கத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். குடிநீர் உரிமையை நிலைநாட்ட அம்பேத்கர் மேற்கொண்ட மகத் சத்யாக்கிரகப் போராட்டத்திற்கு இதே சொல்லாக்கத்தையும் வடிவத்தையும்தான் பயன்படுத்தினார்.
இருவருக்கும் இடையே நிலவிய கருத்தொற்றுமைகளுக்கும் செயலொற்றுமைகளுக்கும் இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. தலித்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி என்பது கைவிடப்பட்டு அந்த இடத்தில் இப்போதுள்ள தொகுதி ஒதுக்கீடு எனும் முறைக்குக் காரணமானதும், இன்று மிகவும் இகழ்ச்சிக்குரியதாகக் கருதப்படுவதுமான பூனா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட கையோடு (1932) டாக்டர் அம்பேத்கர் கூறியதைப் படித்தபோது நான் இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன். அம்பேத்கரை ஒரு கசப்பான சமரசத்தை நோக்கி காந்தியின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அச்சுறுத்தி (blackmailed) இட்டுச் சென்றது என்பதுதான் பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ள கருத்து. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தானதுடன் அம்பேத்கர் வெளிப்படுத்திய கருத்து முற்றிலும் வேறுபட்ட தொனியில் அமைகிறது. காந்தியை அவர் பெரிய அளவில் புகழ்ந்துரைத்தார். அவர் கூறினார், "மகாத்மா" (ஆம். பலரும் நம்பிக்கொண்டுள்ளது போல் அல்லாமல் இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பேத்கர் காந்தியை "மகாத்மா" என்றுதான் அழைத்தார்) தான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இன்னும் சிறந்த ஒரு ஒப்பந்தத்தையே (deal) தலித்களுக்கு அளித்துள்ளார் என்றார். எனினும் பின்னாளில் அம்பேத்கர் காங்கிரசின் போக்கில் அதிருப்தி கொண்டார் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. காங்கிரசின் தோல்விகளும் தவறுகளும் எந்த அளவிற்குக் காந்தியின் மீதான் பழிகளாயின என்பது மிகுந்த விவாதத்துக்குரிய ஒன்று. இந்திய -பாக் பிரிவினையையும், அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த இரத்தப் பெருக்கையும் தடுப்பதில் காந்தியின் தடை ஆணை (writ) செல்லுபடியாகாமல் போனதையும், சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் கொடி ஏற்றும் நிகழ்வைக் காந்தி புறக்கணித்ததையும் நாம் அறிவோம். நாடெங்கிலும் பற்றி எரிந்து கொண்டிருந்த வகுப்புவாத நெருப்பை அணைப்பதில் அவர் தீவிரமாக இருந்தார்.
மதம் என்பதைப் பொருத்த மட்டில் இந்திய மக்கள் நாத்திகம் அல்லது தூய பகுத்தறிவு என்பதை ஏற்க மாட்டார்கள் என்பதை காந்தி, அம்பேத்கர் இருவருமே உணர்ந்திருந்தனர். அம்பேத்கரைப்போல காந்தி தனக்கான மதத்தைத் தேர்வு செய்து கொண்டவர் அல்ல. பிறப்பு அடிப்படையில் அதை ஏற்றுக் கொண்டவர் அவர். தனது மதத்தை அவர் எப்படிப் பெற்றிருந்த போதிலும் மிகவும் நவீனமான, மறுமலர்ச்சிக்குப் பிந்திய கால அணுகல் முறையைக் கொண்டே அதை அவர் அணுகினார்.
மலம் அள்ளும் பணியை அவர் வரித்துக் கொண்டதோடன்றி தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அதைப் பரிந்துரைத்த போது (வற்புறுத்தித் திணித்தபோது என்றும் சொல்லலாம்) அதன் மூலம் "தீட்டு" என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையை அவர் தர்த்தெறிந்தார். கோட்பாட்டளவில் அவர் இகழுக்குரிய வகையில் நீண்ட காலம் வரை வர்ணாஸ்வர தர்மத்தை ஏற்றுக் கொண்டிருந்த போதிலும், இதுவரை 'தீண்டத்தகாதவர்கள்' எனச் சொல்லப்பட்டவர்கள்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட அந்தப் பணியை அவர் என்றைக்குத் தேர்ந்துகொண்டாரோ அன்றைக்கே அதை நடைமுறையில் ஒழித்துக் கட்டினார்.
காலம் செல்லச் செல்ல காந்தி மேலும் மேலும் முற்போக்கானவராக ஆனார். அவர் நிச்சயமாக டாக்டர் அம்பேத்கரிடமிருந்தும் தான் கண்முன் எதிர்கொண்ட உலகம் பற்ரிய தனது உள்ளார்ந்த புரிதல்களினூடாகவும் அவர் பலவற்றையும் கற்றுக் கொண்டார். எடுத்துக்காட்டாக அவர் தன் வாழ்வின் பிற்பகுதியில் சாதி மறுப்புத் திருமணங்களைத் தவிர பிற திருமணங்களை அவர் புறக்கணித்தார். அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தனக்குப் பிறவியினூடாகக் கையளிக்கப்பட்ட இந்துமதத்திலிருந்து முற்றிலும் புதிதான ஒரு இந்து மதத்தை அவர் செதுக்கிக் கொண்டார். இறுதியில் (இந்து மதம்) என்கிற பெயர்தான் (idiom) மிஞ்சியிருந்தது; படிநிலை ஏற்றத் தாழ்வுடன் கூடிய சனாதன தர்மம் அதில் எஞ்சியிருக்கவில்லை. எனினும் 'இந்து' என்கிற அடையாளத்தைத் துறப்பதில் அவர் காட்டிய தயக்கத்தை, இந்த விரிந்த இந்திய மக்கள் கூட்டத்துடன் அவர்கள் விரும்பும் மொழியில் உறவு கொள்ளும் வாய்ப்பைத் தொடர்வது என்கிற நிலைபாட்டிலிருந்து உருவானதாக ஏற்பதா, இல்லை அவரது உள்ளுணர்வு சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலிருந்து அது உருவானதா என்பது விவாதத்துக்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த விவாதத்தில் பெரிய ஆர்வம் இல்லை
காந்தியின் அறக் கோட்பாடு என்பது ஏற்றத் தாழ்வும் வன்மமும் மிக்க சனாதன இந்து மதத்தின் கட்டமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
குறிப்பு (1) : பூனா ஒப்பந்தம் பற்றி மிக மிக மிகத் தவறான கருத்துக்களே இங்கு பதிய வைக்கப்பட்டுள்ளன. காங்கிரசுக்குள்தான் அன்று பா.ஜகவும் இருந்தது என்பதையும் உயர்சாதி ஆதிக்கம், இந்துத்துவக் கருத்தியல் ஆகியவற்றுடன் விளங்கிய அன்றைய காங்கிரஸ் தலைமையுடன் காந்தியும் நேருவும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டுதான் இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது., அன்று தலித்களுக்கு இட ஒதுக்கீடே கூடாது என்பதுதான் பொதுக்கருத்தாக இருந்தது. அம்பேத்கரும் தொடக்கத்தில் இப்போதுள்ள மாதிரியான இட ஒதுக்கீட்டைத்தான் கேட்டார். இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில்தான் தனி ஒதுக்கீடு கோரிக்கைடை அவர் முன்வைத்தார். இந்நிலையில் 18 சத தொகுதி ஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீடு என்பதை நோக்கிய ஒரு கருத்தொருமிப்பு என்பது காந்தியின் உண்ணாவிரதத்தின் மூலமே சாத்தியமானது. ஆம், காந்தியின் உண்ணாவிரதம் உண்மையில் அம்பேத்கருக்கு எதிரானதல்ல. காங்கிரசில் நிரம்பியிருந்த சனாதனத்தை நோக்கியே அது அமைந்தது. காந்தி அம்பேத்கருடன் சேர்ந்து நின்று போராடி இந்த ஒதுக்கீட்டிற்கான ஒரு கருத்தொருமிப்பை எட்டினார் என்பதே சரியான வரலாறு. தோழர் அருணன் அவர்கள் எழுதியுள்ள பூனா ஒப்பந்தம் குறித்த குறுநூல் (பாரதி புத்தகாலயம்) இந்த வரலாற்றை ஆதாரங்களுடன் விளக்கும் ஒரு நூல்.
குறிப்பு (2) : காந்தி இறுதிவரை மாறிக் கொண்டே இருந்தார் என்பதையும், அவரது ஆசிரமத்தில் இனி சாதிமறுப்புத் திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார் என்பதையும் நான் தொடர்ந்து கூறி வந்துள்ளேன்.. அது மட்டுமல்ல அந்தத் திருமணங்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். காந்தியை வருணாசிரமத்தைக் காப்பதற்காக இருந்தவர் எனச் சொல்வோர் வரலாற்றை அறியாதவர்கள் மட்டுமல்ல அறியாமல் பழிதூற்றும் வன்மிகள் என்றே அவர்களை வகைப்படுத்த முடியும். பாஎப்பனர்களும் தமிழ்ச் சனாதனிகளும் காந்தியை 'வருண சங்காரம்' செய்ய வந்தவர் எனத் தூற்றி அவரை எதிர்த்ததையும், அவருக்கு எதிராக நூல் எழுதி வெளியிட்டதையும், காஞ்சி பீடம் ப்படித் தூற்றி வெளிவந்த 'ஆர்ய தர்மம்' எனும் இதழுக்கு நிதி உதவி செய்ததியும் ஆதார பூர்வமாக நிறுவியும் கூட இன்னும் கிளிப்பிள்ளை போல இப்படி வன்மத்தை உதிர்ப்பவர்களுக்கு ஆனந்த் பட்டவர்த்தனின் இந்தப் புரிதல் சமர்ப்பணம்.
No comments:
Post a Comment