வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தன்னிறைவுத் திட்டம் :
=======================
நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும் திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவமுடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் "எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?" என்று கணித்துக் கொள்ளுங்கள். அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில் சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்?
.
தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன. உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும் ஆற்றலைச் செலவிட வேண்டும். இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத்தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச்சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்ம யோகம்" இதில் அடங்கியிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனநிறைவு :
==============
"எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றித் தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மனவலிவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத் துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலைதாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மனநிறைவு உண்டாம்".
.
எதிர்பார்த்தல் ஏமாற்றம் :
=========================
"எதிர்பார்த்தல் எப்போதும் எவரிடமும்
ஏமாற்றமே விளைக்கும் ஏதுமனதில் அமைதி
எதிர்பார்த்தல் எனும்நோயை மாற்றி மனநலம்காண
எதுஉளதோ அதைஏற்று உதவிசெய்தே வாழ்ந்திடுவோம்".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment