திரு. முபா அவர்கள் வள்ளலார்பெருவெளி என்ற இணையத்தில் எழுதி வெளியிட்ட கட்டுரை
வள்ளலாரை வணங்குவது சரியா?
வள்ளலார் படத்தை வைத்தோ அல்லது அவருடைய சிலையை வைத்தோ மற்ற சமயத் தெய்வங்களை வணங்குவது போல் மாலை சாற்றி, பிரசாதம் வைத்து ,கற்பூரம் ஏற்றி வணங்குவது சரியல்ல. தீபத்தை வைத்தே அருட்பெருஞ்சோதிஆண்டவரைத்தான் வணங்கவேண்டும் என்று ஆணித்தரமாக சிலர் பேசுகின்றார்கள். வள்ளலாரே தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னதற்குப் பின் அவரை வணங்குவது தவறு என்றும் கூறுகின்றார்கள். இதுபற்றி ஒரு ஆய்வு .தயவு செய்து பொறுமையாகப் படித்துப் பார்க்கவேண்டும்என வேண்டப்படுகிறது.
வள்ளலாரைப் பற்றிய உண்மையை நாம் முதலில் அறிந்துகொள்வோமாக
வள்ளலார் நாம் பிறந்ததுபோல் ஒரு தாய் தந்தையர்க்கு ஐந்தாவது மகனாகத்தான் பிறந்தார்; இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க் கை நாம் வாழ்கின்ற வாழ்க்கையா? அவர் எந்த ஆசிரியரித்தும் கல்வி பயிலாமல் தானே அனைத்தையும் அறிந்தவராக விளங்கினார்; தொல்காப்பியம் ,பாணிநீயம் போன்ற இலக்கண நூல்களையும் சிறு வயதிலேயே மனப்பாடமாகச் சொல்லக்கூடிய நாவளத்தை வள்ளலார் பெற்றிருந்தார் என்று அவரது மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ளார்.
2 சிறு வயதிலேயே அவரிடம் தரப்பட்ட பணத்தைக் கேணியிலும், குளத்திலும், கூரை மேலும் எறிந்தவர். பொருள் மீது ஆசை அற்றவராக அவர் இருந்தார்.
3 உடையின்மீதோ ,உணவின்மீதோ எதனிலும் பற்றற்றவராக அவர் விளங்கினார்.
4 தனது ஒன்பதாவது வயதிலேயே இறைவன்மீது பாக்கள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.
5 .பன்னிரண்டாவது வயதிலேயே தவம் செய்யத் தொடங்கினார்.
6 தனக்கென ஒரு மனைவி இருந்தும் காமத்தை வென்றவராக விளங்கினார்;
7 வடலூரிலே நூறு ஏக்கரா நிலம் அவருக்குத் தானமாக வழங்கப்பட்டது. அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் மேட்டுக்குப்பம் போய்விட்டார்.மண்ணாசை
என்பதும் அவரிடம் சிறிதும் இல்லை.
8 அவர் எழுதிய பாடல்களை அச்சிட அவரது சீடர்கள் முயன்றபோது பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுமதி தரவில்லை. இறுக்கம் இரத்தின முதலியாரின் உண்ணா விரதத்தின் உறுதியைக்கண்டு அனுமதி அளித்தார். ஆனாலும் இராமலிங்கசாமி என்று போடலாமா என்று கேட்டதற்கு அது ஆரவாரத்திற்கு அடுத்தது என்று மறுத்துவிட்டார். புகழ் ஆசையும் அவரிடம் இல்லை.
9 எல்லையற்ற அவருடைய ஜீவகாருண்யம் ஏழைகளின் பசியைப்போக்கி வருகிறது. அவர் செய்த தவத்தின் முழுப் பலனைத் தருமச் சாலையிலே தான் பெற்றதாக அறிவித்துள்ளார்.
10 இதுவரை வந்த அருளாளர்கள் அத்துணை பேரும் ஆண்டவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் இறைவனோ வள்ளலார் இருந்த அந்தக் குடிசையினுள் நுழைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டான். .இறைவன் வேறு தான் வேறு என்ற நிலை மாறி அவரே இறைவனாக இருக்கின்றார்.
11 வள்ளலார் ஒருவர்தான் முத்தேக சித்தி பெற்று இற வா நிலை அடைந்து இன்றும் என்றும் தனது தேகம் அழியாதவகை செய்து கொண்டு இருக்கின்றவர்.
12 ம க்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை எல்லாம் வில க்க வேண்டும் என்ற உத்தரவை வள்ளலாருக்கே இறைவன் அளித்திருக்கின்றான். மேலும் நமக்கெல்லாம் துணையாக இருக்கும்படி வள்ளலாரை இறைவன் வைத்திருக்கின்றான்.
13 அடக்கமே உருவானவர் தன்னை வணங்க வேண்டாம் என்று சொன்னதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு அவர் காட்டிய தயவு ஒழுக்கம் முதலியவற்றைப் பின் பற்றாமல் அவரை வணங்காமல் விட்டுவிட்டால் குருவை வணங்கக் கூசி நின்றேனோ என்ற பாவத்திற்கு மட்டுமே நாம் ஆளாக நேரிடும்.
14 அருட்பெருஞ்சோதி அகவலில் தந்தை என்ற பகுதியில் இறைவன் தனக்கு என்னென்ன அளித்தான் என்பதை நன்கு விளக்கியுள்ளார்.தனது செங்கோலையே இறைவன் வள்ளலாருக்கு அளித்திருக்கின்றான்.செங்கோல் என்பது என்ன? ஆட்சி செய்யும் உரிமை அல்லவா?
15 அகவலில் வள்ளலார் கூறியுள்ளதைச் சற்று நினைவு கூறுவோம்.
தங்கோல் அளவது தந்து அருட்சோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே.
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே.
தன் சித்தனைத்தையும் தன் சமுகத்தினில் என் சித்தாக்கிய என் தனித் தந்தையே
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே
தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே
தன்னையும் தன்னருள் சக்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே.
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித் தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித் தந்தையே.(அகவல் வரிகள் 1133 முதல் 1150 வரை)
இந்த வரிகளில் வள்ளலார் கூறியுள்ளது உண்மை என்றால் வள்ளலார் இறைவன் என்று நிச்சயமாக உணரலாம்.
வள்ளலாரை வணங்குவது சரி என திரு அருட்பாவில் பலப்பலப் பாடல்கள் சான்றாக உள்ளன. அவற்றுள் ஒன்று இரண்டைப் பார்ப்போமாக.
இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்திச்
ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என எனை வைத்து என்னுடைய
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
இந்த உலகத்தில் உள்ள மக்களால் துதிக்கத் தக்கவனாகவே என்னை இறைவன் வைத்துள்ளான் என்றாரே வள்ளலார் இதைப் படிக்கவில்லையா?
இந்த உலகத்து மக்கள் மட்டுமல்ல வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் செய்யுமாறு வள்ளலாரிடம் இறைவன் வந்து கலந்தானாம்.
நான் செய்த நற்றவம்தான் யாதோ நவிற்றரிது
வான் செய்த தேவரெலாம் வந்தேவல்-தான் செய்து
தம்பலம் என்றே மதிக்கத் தான் வந்தென்னுட் கலந்தான்
அம்பலவன் தன்னருளினால்.
நமக்கு வரக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கும்படி வள்ளலாருக்கு இறைவன் ஆணை இட்டதை அகவல் சான்றாக வெளிப்படுத்துகிறது.
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறு க உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை.,.(என்றனை என்ற வார்த்தையை நாம் நன்கு உணர்ந்தால் இந்த இரண்டு வரிகளும் இறைவன் வள்ளலாரிடம் கூறியது என்பது புரியும்.
வள்ளலாரை இறைவன் நமக்குத் துணையாக வைத்திருக்கின்றான். ஆதாரம்.
எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே. (அருட்பா)
வள்ளலாரை நமக்குத் துணையாக இறைவன் வைத்துள்ளான் என்பதை உணர்ந்து மறவாமல் அவரை வணங்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் அனைத்தும் நீங்கும்.
தெய்வ வழிபாட்டைப் பற்றிச் சற்று ஆய்வு செய்வோம்.
இறைவன் ஒருவனே
ஒவ்வொரு சமயத்தாரும் ஒவ்வொரு பெயரில் இறைவனை வணங்குகின்றனர். பெயருக்கேற்ப வெவ்வேறு விதமான உருவங்களையும் இறைவனுக்குக் கற்பித்து அந்தந்த உருவங்களிலேயே இறைவன் விளங்குவதாகவும்நம்பி வழிபட்டு வருகின்றனர். படிப்பறியாத பாமர மக்கள் மட்டுமல்ல நன்கு படித்த மேதைகளும் தாங்கள் சார்ந்த சமயத்தில் கூறப்பட்டுள்ள உருவங்களிலேயே தெய்வ வழிபாடு செய்துவருகின்றனர். இப்படி எல்லாம் தனித் தனியாகத் தெய்வங்கள் இல்லை .எல்லோருக்கும் பொதுவாக இருப்பது ஒரே ஒரு தெய்வம்தான். இந்த மாபெரும் உண்மையை உணராது , விளக்கமில்லாத காரணத்தால் பலப்பல தெய்வங்கள் உண்டென்று நம்பி வழிபட்டு வருகின்றீர்கள். இந்த உடம்பில் உயிர் எப்படி ஒன்றுதான் இருக்கமுடியுமோ அப்படியே இந்த உலகில் இறைவனும் ஒருவன்தான் இருக்கமுடியும்.
இதை உணராது இருவர் என்றும்,மூவர் என்றும், இயலும் ஐவர் என்றும் இப்படி எல்லாம் இல்லை என்று விளக்கம் தருகிறார் வள்ளலார்.
உருவராகியும் அருவினராகியும் உரு அருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழல்வ தென் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.(அருட்பா)
அறிவைக்கொண்டு சிந்தித்தால் பலவேறு உருவங்களில் பலவேறு பெயர் கொண்ட தெய்வங்கள் ஆங்காங்கே சிம்மாசனம் போட்டு அமர்ந்து ஆட்சி செய்யவில்லை .எல்லாம் நமது முன்னோர்கள் செய்த கற்பனைகளே என்று நன்கு புரியவரும். இனியாவது நாம் வணங்கும் தெய்வத்தைப் பற்றி நன்கு சிந்திப்போமாக. பலப்பல தெய்வங்களை வணங்குவோர் பற்றிய வள்ளலாரின் ஒரு பாடலை இங்கே காணலாம்.
தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும் சேர்கதி பல பல செப்புகின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார் மேல்விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய் வந்த துன்பு ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே/
சமயத் தெய்வங்கள் அனைத்தும் கற்பனையே என்றும் அவற்றை வழிபாடு செய்வது அவசியம் இல்லை எனவும் வள்ளலார் கூறிவிட்டதால் அவற்றை வணங்கலாமா வேண்டாமா என்ற பேச்சிற்கே இடமில்லை. அவற்றை வணங்கவேண்டிய அவசியம் இல்லை.
அருட்பெருஞ்சோதி என்பதை வள்ளலார் ,அனுபவமே என்று கூறுவதை அகவலில் காண்கிறோம்.
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி (அகவல் வரி 117 -118 )
இந்த வரியின் விளக்கம் என்ன ?இந்திரியங்களும் கரணங்களும் கடந்த நிலையில் அறியக்கூடிய ஓர் அனுபவமே அருட்பெருஞ்சோதி ஆகும்.
இந்த அனுபவத்தை அடையக்கூடிய முயற்சி செய்யாமல் அருட்பெருஞ்சோதி என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
அடுத்ததாக அருட்பெருஞ்சோதி என்பது கொடுக்க வாங்கக்கூடிய ஒரு பொருளாக உள்ளது ஆதாரம்.
அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே அருட்பெருஞ்சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய்
தஞ்சம் என்றவர்க்கருள் சத்திய முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருட்பெருஞ்சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றி எந்தனையே காத்தென துளத்தினில் கலந்த மெய்ப்பதியே
எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே எய்ப்பற வாழ்க என்றியம்பிய அரசே
சமரச சன்மார்கத்தின் முதலே தனி நடராஜ என் சற்குரு மணியே.
(குறிப்பு : அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவம் அதை நாம் தவம் செய்து அனுபவிக்கவேண்டும்)
ஒளிவழிபாடு:
உரைநடையில் வள்ளலார் நித்திய கர்ம விதி , பொது விதி, சிறப்பு விதி என்றெல்லாம் எழுதியுள்ளார். அவற்றில் எங்கும் விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும் என்று கூறவில்லை. தெய்வ வழிபாட்டுக்கென ஞான சபை நிறுவிய வள்ளலார் விளக்கேற்றி பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது அல்லது 72 வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ஞான சபையின் வாயிற்படிக்கு அருகில் வைக்கச் சொல்லி இருக்கிறாரே தவிர ஞான சபையின் உள்ளே கொண்டு வைக்கவேண்டும் என்று கூறவில்லை. மேட்டுக்குப்பத்தில் கூட விளக்கை வெளியே வைத்த வள்ளலார் இந்த தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாகப் பாவித்துக்கொள்ளுங்கள் என்றாரே தவிர இந்தத் தீபமே கடவுள் என்று கூறவில்லை.
ஞானசபையை வள்ளலார் பூட்டிவிட்டார். சில ஆண்டுகத்குப்பின் சபாபதி சிவாச்சாரியார் உட்பட ஏழுபேர் ஒன்று கூடி ஞானசபையைத் திறக்கின்றார்கள். அந்த நேரத்தில்தான் சிவாச்சார்யார் தீபத்தை உள்ளே வைக்கின்றார். இந்தச் செயலை அப்போதிருந்த சன்மார்கிகள் எதிர்த்தார்கள். ஆதாரம் அப்போதிருந்த சன்மார்கிகள் வெளியிட்ட டிரஸ்டி மறுப்பு என்ற வெளியீடு. இதனைத் தவத்திரு ஊரன் அடிகளார் வெளியிட்ட வடலூர் வரலாறு என்ற புத்தகத்தில் காணலாம்.
சிவாச்சாரியார் ஏற்படுத்திய தீப வழிபாடு நிலைத்து விட்டது. அது வள்ளலார் கருத்து அல்ல. .
ஒளி என்பது தவம் செய்து மனம் செயல் படாத நிலையில் பர நாத அனுபவத்தில் நம்முள்ளே காண்பதே ஆகும் இதுவே அருட்பெருஞ்சோதிஅனுபவம்.
No comments:
Post a Comment