Thursday, November 17, 2016

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்


ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
அவளைக் கல்லினுள்ளிருந்து
உயிர்ப்பிப்பது என்று பொருள்

அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்
கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது

இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்

நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில்
கொண்டுபோய் நட்டுவளர்த்தல் என்று பொருள்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
தன் தசைநார்களின் ஆறறல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்

மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக்கொடுப்பதாகும்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க
அவளுக்கு உதவுவதாகும்
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்

நான் ஒரு பெண்ணைக் காதலித்ததில்லை.

சச்சிதானந்தன் கவிதைகள்.
மலையாளத்திலிருந்து
தமிழில் சிற்பி

No comments:

Post a Comment