பெருங்குடிகார இளைஞன் ஒருவனைப் பயணத்தில் சந்தித்தேன். குடியை விட்டிருந்தான். கையில் நன்றாகக் காசு புழங்குவதாகச் சொன்னான். போதை மறுவாழ்வு மையத்தில்தான் உன்னைச் சந்திப்பேன் என நினைத்திருந்தேன். இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமானது? எனக் கேட்டதற்கு அவன் சொன்னது. "நிறைய அவமானங்களைச் சந்தித்த போதெல்லாம் இதை விட வேண்டும் என்று தோன்றியதில்லை. என் மகனுக்குப் பாண்டி கோயிலில் என் மடியில் வைத்து மொட்டை போடும் போது, என் அப்பாவும் இதைப் போல என் மீதான கனவுகளோடுதானே இருந்திருப்பார் என்று தோன்றியது. உடனடியாக விட வேண்டும் என்று தோன்றியது. என் மனைவியிடம் சொன்ன போது சங்கடமாகச் சிரித்தாள். மறுநாள் என்னுடைய கடைசிக் குடியைக் குடித்துக் கொண்டிருக்கும் போது இனி குடிக்கப் போவதில்லை என உறுதியாகத் தோன்றியது. அதை விட்ட பிறகு இந்த நான்கு வருடங்களில் என் மகிழ்ச்சியை மீட்டெடுத்திருக்கிறேன்" என்றான். மகிழ்ச்சியை மீட்டெடுக்க கடைசிக் குடியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அவனது கதையைச் சமர்ப்பிக்கிறேன்.
பபி.
No comments:
Post a Comment