Bergin G Kadayal...
"நான் கோவாவில் இருக்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகும். வந்தபின் வீட்டுக்கு வருகிறேன்." என்று என் அருகில் இருந்து பயணம் செய்தவர் கூறியதும் அவரை திரும்பி பார்த்தேன். நாகர்கோவில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் இருந்த இருவர் தான் கோவாவில் இருப்பதாகச் சொன்னதும் அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்க மனம் பிரியப்பட்டது. கண்களை மூடி காதுகளை கூர்மையாக்கினேன்.
"நான் என்ன சொன்னாலும் புரியாதா?"
மறுமுனையில் பேசியது எதுவும் கேட்கவில்லை.
" இப்படி நீ பேசிக்கொண்டிருந்தால் இங்கேயே விழுந்து செத்திருவேன்."
அலைபேசியை எனது அருகிலிருந்தவர் துண்டித்து விட்டார். தொடர்ந்து ஐந்து முறை அலைபேசி சிணுங்கியது. அவர் எடுக்கவில்லை. ஆறாவது முறை சிணுங்கியதும் வேகமாக அலைபேசியை எடுத்து " இனி கால் பண்ணினா இங்கேயே செத்திருவேன்" என்று கத்தினார். பேருந்தில் இருந்த அனைவரும் அவரை திரும்பி பார்த்தனர். அவருக்கு அவமானமாய் இருந்திருக்க வேண்டும். நெற்றியை முன்பிருந்த இருக்கையின் கைப்பிடிகளில் கவிழ்த்துக்கொண்டார்.
இரண்டு நிமிடம் சென்றிருக்கும். மீண்டும் அலைபேசி சிணுங்கியது. அதை எடுத்து எதையும் யோசிக்காமல் வேகமாக கீழே வீசினார். பேருந்தின் கதவோரம் அமர்ந்திருந்ததால் உடைந்த அலைபேசியின் பெரும்பாலான பகுதி பேருந்துக்கு வெளியே சிதறியது. ஒரு சில பகுதி மட்டும் அவரைச் சுற்றி கிடந்தது. எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஆனாலும் யாரும் எதுவும் பேசவில்லை. பேருந்து அவன் மனதைப்போல முன்னை விட அதிவேகமாய் சென்றுகொண்டிருந்தது.
பிரச்சனைகள் வருவது சகஜம். யாருக்கு தான் பிரச்சனை இல்லை. எந்த மனிதன் தன்னுடைய கவலைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு அடுத்தவர்களின் கவலைகளை நீக்க முன்வருகிறானோ அவன் தான் சான்றோன் என வள்ளுவர் கூறுகிறார்.
எனக்கு ஒரு ஈசாப் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
காட்டில் வாழும் முயல்கள் எல்லாம் ஒன்று கூடின. சிங்கம், புலி போன்ற பிற விலங்குகளுக்கு பயந்து அஞ்சி வாழும் நிலையை கண்டு வருந்தின. இப்படி பயந்து தினம் தினம் செத்துப் பிழைப்பதை விட தற்கொலை செய்து இறந்து விடுவதே மேல் என முடிவு செய்கின்றன.
அனைத்து முயல்களும் சேர்ந்து மலை உச்சிக்கு சென்று உச்சியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தன.
மலை உச்சிக்கு பெருங் கூட்டமாக வரும் முயல்களைப் பார்த்ததும் மலையுச்சியில் பதுங்கி இருந்த சில தவளைகள் பயந்து போய் மலை உச்சியிலிருந்து அருகிலிருந்த மடுவுக்குள் பாய்ந்தன.
சாக நினைத்த முயல்கள் தவளைகளை வியப்புடன் பார்த்தன. உலகில் தங்களுக்கு மட்டும் அச்சம் நிறைந்த வாழ்வு இல்லை. தங்களைவிட அஞ்சி வாழும் உயிரினங்களும் உள்ளன என்பதைக் கண்ட முயல்கள் தங்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட்டன.
மனிதன் சோதனைகளுக்கு ஆளாகும் போது அவனுடைய பகுத்தறிவு பெரும்பாலும் வேலைசெய்வதில்லை. அந்த சூழ்நிலையில் முட்டாள்தனமான எண்ணங்கள் மனதுக்குள் ஆக்கிரமிக்கின்றன. சோதனைகள் நம்மை மொத்தமாய் புரட்டிப்போடும் போது தான் நாம் மனம் கலங்கி விழித்துப் பார்ப்போம். அப்போது அங்கே புதிய பாதை தெளிவாக தெரியும்.
நம்மைப் போல் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வாழ்விலும் துன்பங்கள் நிறைந்து தான் இருக்கின்றன. துன்பங்கள் இன்ப வாசலை அடைய வழிகாட்டும் மெழுகுவர்த்திகள். தயவு செய்து மெழுகுவர்த்திகளை அணைத்துவிடாதீர்கள்
No comments:
Post a Comment