Friday, November 18, 2016

புத்தர் - முழு பிரக்ஞை என்றால் என்ன? 

புத்தருடைய முழு பிரக்ஞை என்றால் என்ன? 
அது இரண்டு தன்மையுடையது. ஒன்று 'பிரக்யான்' (Pragyan) என்றும் அடுத்து 'கருணா' (Karuna) என்றும் வகைப்படும். அதாவது ஒன்று புத்திசாலித்தனம் அடுத்தது கருணை என்பதாகும். இங்கு புத்திசாலித்தனம் என்பது விஷய ஞானத்தைக் குறிப்பது (knowledge ) அல்ல. இதன் அர்த்தம் என்னவென்றால், விழிப்புநிலை, தியானநிலை,,அமைதிநிலை, கவனிப்புத்தன்மை, முழுமையான ஈடுபாடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றிலிருந்துதான் கருணை பிறக்கவேண்டும். 
இந்த உலகமே துன்பத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. அப்பொழுது, நீங்கள் அந்த பேரின்பத்தை அடைந்தால், அடுத்தவர்களது உணர்வுகளையும் முழுமையாக உணருவீர்கள். இந்த உலகத்தின் உயிர்கள் அனைத்தும் உங்களது கருணையால் நிரம்பி வழியும். அது எந்த பாகுபாடும் பார்க்காது. அதற்கு விலங்குகள், பறவைகள், ஆறுகள், மலைகள், மரங்கள், நட்சத்திரம் மற்றும் மனிதர்கள் எல்லாம் ஒன்றே. இந்த இரண்டும்தான் புத்தருடைய தன்மைகள். அதாவது முழுமையாகப் புரிந்துகொள்தல். அடுத்து கருணையால் உணருதல் என்பதாகும். 
உங்களுடைய உணர்வு அல்லது உந்துதல், முழு பிரக்ஞையால் நிரம்பி இருந்தால், கருணை உணர்வுக்கு எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது. அதை உங்கள் இஷ்டப்படி கொலை செய்ய முடியாது. சில பேர்கள் என்னிடம் வந்து, "ஓஷோ, நீங்கள், அந்த கணம் ஏற்படும் உணர்வால் செயல்படுங்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால், சில சமயம், நான் என் மனைவியையே கொலை செய்யவேண்டும் போல் உணர்வு ஏற்படுகிறது. அது எதனால்?" என்று கேட்கிறார்கள். உங்கள் உணர்வில் முழு விழிப்புநிலை கலந்து இருந்தால், உங்களால் எப்படி கொலை செய்ய முடியும்? உங்களால் அப்படி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஏனெனில், அதன் கூடவே கருணையும் சேர்ந்தே இருக்கும். கருணையையும், விழிப்புணர்வையும் ஒருக்காலும் பிரிக்க முடியாது. 
புத்தர், "விழிப்புணர்வு கலக்காத கருணை, மிகவும் ஆபத்தானது. இதைத்தான் மக்களில் பெரும்பாலோர் செய்து வருகிறார்கள். அவர்களை நாம் கருணையுள்ளவன், கொடையாளி என்று கொண்டாடுகிறோம். அவர்கள் நன்மையே செய்து கொண்டு வரலாம். ஆனால், அந்த நன்மையில் எந்த உயிர்க்கலப்பும் இருக்காது. அது கிட்டத்தட்ட இயந்திரத்தனமானது. ஆகவே, அதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. அதாவது, அவர்கள் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் பொழுது, அதே வியாதிக்கு, அடுத்தவருக்கு மருந்து கொடுப்பது போல. ஆகவே, டாக்டர்களே, முதலில் உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். மக்களே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை குணமாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, அடுத்தவரை குணமாக்க வேண்டிய அவசியமே இருக்காது. 

ஓஷோ ( தந்த்ரா அனுபவம் பக்கம் 104 &105)

No comments:

Post a Comment