பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், பெரும்பாலும் நேரடியாகச் சாப்பாடுதான் அன்று எமக்கு. நல்ல பசியும் இருக்கும். மத்தியானம் அரைவயிறு, கால்வயிறு, சோறு வடித்த கஞ்சி அல்லது பைப் தண்ணீர் என்பதால். எமக்காவது மோசமில்லை, எம்மில் சிலருக்கு பள்ளி விட்டு வந்தாலும் விளக்கு வைத்தபின் உலையேற்றி வடித்து இறக்கி, குழம்பு கொதித்த பின்தான் சாப்பாடு.
சற்று வசதியான வீட்டுப்பிள்ளைகள், மத்தியானம் நல்ல எடுப்பு எடுத்திருக்கும் என்பதால், மாலை பள்ளி விட்டு வந்ததும், வீட்டில் சிறுதீனி ஏதும் செய்து வைத்திருப்பார்கள். சின்ன பனையோலைக் கொட்டானில் போட்டு, வாசல்படிப் புரையில் உட்கார்ந்து தின்பார்கள். காலையில் நனையப் போட்டு வைத்து, மாலையில் உப்புப் போட்டு அவித்த ெமாச்சை, கடலை, பெரும்பயிறு, சிறுபயிறு, காணம் என்பன. பெரும்பயிறு என்கிற தட்டப்பயிறு என்றால், வேகவைத்துக் கொஞ்சம் அவல் தூவி விரவிக் கொடுப்பார்கள். சிறுபயிறு என்கிற பாசிப்பயிறு என்றால், கொஞ்சம் தேங்காய் துருவிப் போட்டு. நாகரிகமான மொழியில் அதனைச் ‘சுண்டல்’ என்பார்கள்.
உழக்குப் போல, கொட்டானில் வைத்துத் தின்று கொண்டிருப்பார்கள். உழக்கு என்றால் தெரியும்தானே! தமிழ்தான்… ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, பக்கா என்பன முகத்தல் அளவுகள். நாழி எனில் ஏகதேசமாக ஒரு லிட்டர். ஒளவை, ‘நாழி முகவுமோ நானாழி?’ என்றாள். ‘நான்கு நாழிகள் கொள்ளும் தானியத்தை ஒரு நாழி முகக்க முடியுமா’ என்ற பொருளில். ‘உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம்’ என்பதுவும் ஒளவைதான். உண்பது நாழி அரிசிச் சோறு, உடுப்பது இரண்டு முழம் வேட்டி என்று பொருள். இன்று நாழி அரிசிச் சோறு என்பதைக் கற்பனை கூட செய்ய இயலாது.
மாலைச் சிற்றுண்டி, பள்ளி விட்டு வரும் பாலகருக்குச் செய்து தருவது ஒன்றும் மலை மறிக்கும் காரியம் இல்லை. சிறியதோர் திட்டமிடல் வேண்டும், அவ்வளவே! மாலை சுண்டல் செய்ய வேண்டும் என்றால், முதலில் வீட்டில் கடலையோ, பயிறோ இருக்க வேண்டும். அதனை உரிய காலத்தில் நனையப் போட வேண்டும். குக்கர் இல்லாத, கேஸ் அடுப்பு இல்லாத வீடுண்டா இன்று? தோதுப் போல குக்கரில் வைத்து, பயிறுக்கு ஏற்றபடி விசில் விட வேண்டும். பயிறு வெந்து, குக்கர் ஆறியதும், சீனிச் சட்டியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு – கறிவேப்பிலை தாளித்து, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி, வத்தல் மிளகாய் கிள்ளிப் போட்டு, அதில் வேகவைத்த பயிறு போட்டு ஒரு புரட்டுப் புரட்டினால் தீர்ந்தது சோலி. மேலே தேங்காய்த் துருவல் போட்டுக்கொள்ளலாம்.என்ன இடுக்கண் நமக்கு சிறுவருக்குச் செய்து வழங்க?
நீங்கள் கேட்பீர்கள், ‘எல்லாம் சரிதான் ஐயா, அதற்கு பள்ளி விட்டுச் சிறுவர் வரும்போது வீட்டில் பெற்றோர் ஒருவர் இருக்க வேண்டாமா?’ என்று. அதுதானே இங்கு பிரச்னையே! இன்றைய வாழ்க்கைச் சூழலில் இருவர் சம்பாத்தியம் இல்லாமல் தீராது. கணவன் அல்லது மனைவியின் பெற்றோர் கூடவே வாழ்வது என்பது எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. அக்கம்பக்கத்து வீட்டார் நிலைமையும் நம் நிலைமைதானே! நகரம் என்பது கிராமம் அல்லவே! நமக்கோ கல்யாணக் கடன், வீடு கட்டக் கடன், ஃபிரிட்ஜ்- டி.வி- வாஷிங் மெஷின் கடன், நகைக் கடன், புடவைக் கடன், வாகனம் வாங்கிய கடன் என்று எத்தனை!
பல வீடுகளில் டைனிங் டேபிள் மேல் பல்வகை உதிரி பிஸ்கெட்கள் கொண்ட டின், பிரட், பட்டர், ஜாம், காலையிலேயே போட்டு பிளாஸ்க்கில் ஊற்றி வைக்கப்பட்ட பால் அல்லது பால் பானங்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பள்ளி விட்டுத் திரும்பும்போதே அரை லிட்டர் பால் பாக்கெட், பிஸ்கெட் அல்லது பன் வாங்கி வருகின்றன. டீ போட கற்று வைத்திருக்கின்றன. அல்லது பலகாரக் கடையிலிருந்து தலைக்கு இரண்டு பப்ஸ் அல்லது சமோசா… நவீன இளைஞர்கள் பணி இடைவேளையில் சில பல பப்ஸ்களைத்தான் மதிய உணவாகக் கொள்கிறார்கள்.
புகழ்பெற்ற நிறுவனங்களின் பால் தயாரிப்புகளில் புழு இருக்கிறது என்கிறார்கள். புலம்பிப் பயனில்லை. Junk Foodக்கு எதிரான மனோபாவம் வளர்த்துப் பழக வேண்டும். குறிப்பாகக் குழந்தை உணவு எனும்போது. நமது நாரத்தங்காய் ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய் ஓராண்டு இருந்தாலும் புழு வருவதில்லை. மலையாளிகள் பருவ காலத்தில் செய்து வைக்கும் பலாப்பழ வறட்டியில் வருவதில்லை. பாரம்பரிய வற்றல், வடகம், காணப் பொடி, பருப்புப் பொடி, தவணைப் புளி, வேப்பிலைக் கட்டியில் வருவதில்லை.
அதி நவீன முறையில், காற்றுப் புகாமல், கைபடாமல் தயாரிக்கப்பட்டு, சீல் வைக்கப்படும் பழரசத்திலும் பழக்கூழிலும் பழ அடையிலும் எப்படிப் புழு வருகிறது? வண்ணப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை, கண்ணால் பார்க்காமல் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகின்றனர் சிறுவர்கள்… மனிதன் உண்ணத் தகுதியற்ற விதவிதமான வேதியியல் பொருட்களின் சேர்மானம் வேறு.
எப்படிக் காப்பாற்றப் போகிறோம் நமது குழந்தைகளை, இம்மாபாவிகளின் பேராசைக் கரங்களில் இருந்து? ஆண்டுக்கு ஒரு தரம் புத்தாடை வாங்கிக் கொடுத்து, பலூன்கள் ஊதிக் கட்டித் தொங்க விட்டு, மூவாயிரம் பணத்துக்கு கேக் வாங்கி, மெழுகுத் திரி ஏற்றி, ஊதி அணைத்து, ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ எனக் கூவிப் பாடினால் போதுமா?
எல்லாக் குழந்தைகளும் ஐந்தரை அடிதான் வளரும், ‘எமது ஊட்ட பானம் நாளுக்கு இருமுறை பருகினால் ஏழே காலடி வளரலாம்’ என்பதை நம்பினால் தீர்ந்ததா கடமை? எங்கள் பற்பசைக்குக் கிருமிகள் அண்டாது என்றால், ஏன் இத்தனை பல் மருத்துவக் கல்லூரிகளும் பல் ஆஸ்பத்திரிகளும்?
மூதாதையர் சொன்னதை நம்ப மாட்டோம். ஆனால், நூற்றுக்கணக்கான கோடிகள் செலவில் விளம்பரம் செய்யும் கொலைச் சுறாக்களைக் கண்மூடித்தனமாக நம்பிக் கட்டுப்பட்டு நடப்போம். அவர்கள் சொல்லும் பற்பசை தேய்க்கும் சிறுவரை, பல்லால் ஒரு கரும்பைக் கடித்துத் தின்னச் சொல்லுங்கள் பார்ப்போம்!
சற்று விவரமுள்ள பள்ளிகளில், குழந்தைகள் Junk Food எடுத்துவர அனுமதி இல்லை. அறியாமை காரணமாக, நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் பார்த்துப் பரவசமடைகிறார்கள். இலவசமாகக் கிடைக்கிறது என்றால் விஷம் வாங்கித் தின்போமா?
-நாஞ்சில் நாடன்
No comments:
Post a Comment