க.இளம்பகவத்-
சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்வானதற்கு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
தேர்வில் தேர்வானதே சாதனை என்று கருதி கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. அந்த நிலையைத் தாண்டி மனமுதிர்ச்சி அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. தேர்ச்சி பெறுவது ஒரு தொடக்கம்தான் அதுவே முடிவல்ல. அந்த பணியில் சென்று நாம் என்ன செய்கின்றோம் என்பதே முக்கியம். இது குறித்தும் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு உள்ள புனிதத்தன்மை என்ற மாயை குறித்தும் சற்றே நீண்ட பதிவு.
பொதுவாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களின் ரோல் மாடல்களாக சில நல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அலுவலர்களைக் கூறுவர். அவர்களின் நேர்மையான, ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்த்து தாம் சிவில் சர்வீசஸ் தேர்வை இலட்சியமாக கொண்டதாகவும் கூறுவர். துரதிஷ்டவசமாக அவ்வாறு எனக்கு ரோல் மாடல்கள் யாரும் இல்லை.! பல மோசமான முன் உதாரணங்களை கடந்தே இந்த சிவில் சர்வீசஸ் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு நான் வளர்ந்த சூழலையும் சந்தித்த அனுபவங்களையும் சொன்னால்தான் சற்று புரியும்.
எங்கள் குடும்பம் எங்களூரில் முற்போக்கு சிந்தனைகளை மிகத்தொடக்க காலத்திலிருந்துபின்பற்றிய குடும்பம். எங்கள் தந்தை மற்றும் பெரியப்பா சமத்துவச் சிந்தனை, தீண்டாமை எதிர்ப்பு, பொதுவுடைமை தத்துவ நெருக்கம், திராவிட இயக்க ஈடுபாடு கொண்டவர்கள். என் பெரியப்பா திரு. கிருஷ்ணசாமிஅவர்கள் வருவாய்த்துறையில் கர்ணமாக பணியாற்றியவர். எங்கள் ஊர் ஏழைமக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படக்கூடாது என்பதற்காக அப்போது மிகவும் உயர்ந்த பதவியாக இருந்த டிஸ்ரிக்ட் போர்டு சேர்மன் ஒருவருடன் கடுமையாக மோதியவர். ஒரு கட்டத்தில் தன் சுயமரியாதைக்கு இழுக்கு நேர்ந்தபோது நேரடியாக மோதி அவரை அடித்து துவைத்தவர்.! இதனால் தன் பதவியை இழந்தவர். யாருக்காக போராடினாரோ அந்த மக்களே இவர் சார்பாக வழக்கு தொடர்ந்து மீண்டும் பதவியை பெற்றத்தந்தனர். தங்களின் நில உரிமையை மீட்டனர்.
என் தந்தை திரு. கந்தசாமி எங்கள் கிராமத்தின் முதல் பட்டதாரி. கல்லூரிக்காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தவர். பின்னர் சமூக இயக்கங்களில் பங்கு கொண்டு மறைந்த பல தலைவர்களிடமும் இப்பொழுது மூத்த தலைவர்களாக உள்ள பலருடன் நேரடி நட்பு கொண்டவர். எந்த நிலையிலும் தனக்குச் சரி என்று தோன்றும் கருத்தை கேட்பவர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் முகத்துக்கு நேர் சொல்லும் துணிச்சலுடையவர். வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர். தாலுக்கா அலுவலகங்களில் நடக்கும் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்காக பல உயர் அலுவர்களுடன் சண்டையிட்டு கடும் துன்பங்களை அனுபவித்தவர். எந்நிலையிலும் தன்னிலை இறங்காதவர்.
எம் தாய் தீவிர பொதுவுடைமை களப்போராளி. மாதர் சங்கத்தின் ஒன்றிய- மாவட்ட பொறுப்புகளை வகித்தவர். உழைக்கும் பெண்களின் நலனுக்காக பல தீவிர போராட்டங்களில் பங்கெடுத்தவர். இந்த பரந்து விரிந்த சிந்தனைத் தளத்தில் நான் வளர்ந்தேன். இந்த குடும்ப சூழலில் வளர்ந்த நான் எந்தமாதிரியான சமூக சிந்தனைகளை பெற்றிருந்திருப்பேன் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.
எனது தந்தை தனது ஐம்பதாவது வயதில், நான் +2 படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென இறந்துபோனார். குடும்பத்தில் இருந்த ஒரேஒரு வருமானமீட்டுபவரும் இல்லை. குடும்ப சுமையை முழுவதுமாக என் தாயார் சுமந்தார். இந்த நிலையில் அரசுப்பணியில் இடையில் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு அரசுப்பணி அளிக்கும் கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். இதனால், என் கல்விச்சான்றிதழ்கள் அவ்வலுவகங்களின்அழுக்கடைந்த பீரோக்களுக்குள் அடைந்தன. கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு பறிபோனது. ஆம், நான் கல்லூரியே சென்றதில்லை. சரி வேலையாவது கிடைத்தாதா என்றால் அதுவும் இல்லை. எனக்கு முன்னர் நான்காண்டுகளுக்கு முன்னால் விண்ணப்பித்தவருக்கே இன்னும் வேலை தரவில்லை உனக்கு எப்படி உடனே தரமுடியும் என்று சாவகாசமாக பதில் உரைத்தனர். இது போல் எனக்கு முன்னும் பின்னும் விண்ணப்பித்து 18 பேர் காத்திருந்தனர். இதில் இடையில் புகுந்து குறுக்குவழியில் சிலர் உடனடியாக வேலை வாங்கிச்சென்றனர்.! எங்களுக்கு பின்னர் வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது எங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கேட்டால் பதில் சொல்ல யாருமில்லை. (அப்பொழுது தகவல் அறியும் உரிமைச்சட்டம் இல்லை).
என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசித்தபொழுதுதான் நாங்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று தெரிந்தது. அப்பொழுது அனைவரின் கண்களுக்கும் ஆபத்வாந்தவனாக தெரிந்தவர் மாவட்ட ஆட்சியர்! இவர் ஐ.ஏ.எஸ் ஆஃபீசர்.! சகல அதிகாரங்களையும் பெற்றவர். நமக்கு ஏற்பட்ட அநீதியைச் சொன்னால் நீதி கிடைக்கும் என்று சக நண்பர்கள் சொல்ல அவரிடம் முறையிடலைத் தொடங்கினோம்.! பின்னர், எங்களின் பயணம், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை செயலாளர், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலர், தலைமைச் செயலாளர் வரை நீண்டது. அனைவரும் தலையைச்சுற்றி ஐ.ஏ.எஸ் என்ற ஒளிவட்டம் பெற்றவர்கள்!
நான் என் இளைமைப் பருவத்தில் சந்தித்த இந்த ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் தங்களின் கீழ் வேலை செய்யும் கிளர்க்குகள் என்ன சொல்கின்றனரோ அதை வழிமொழியும் பணியையே செய்தனர். யார் ஒருவரும் தம்மிடம் குறையென்று வந்திருக்கும் இவர்களுக்கு என்ன குறை, அது நியாமானதா, நியாமானது எனில் இதை எப்படியாவது தீர்க்க இயலுமா, தீர்க்க முயலும்போது தோன்றும் சிக்கல்கள் என்ன, அதை எப்படி சரி செய்யலாம் என்று சிந்தையை செலுத்தியதில்லை. வரும் கோரிக்கை மனுக்களில் தங்களின் பொன்னான கையொப்பத்தை இட்டு செக்ஷ்ன்களுக்கு அனுப்பும் பணியை முடித்து, இதை பரிசீலிக்க சொல்லியிருக்கிறேன் உங்களுக்கு தகவல் சொல்வார்கள் என்று முகத்தில் புன்னகை சிந்த பதில் சொல்வர்.
நாம் யார்பற்றி நம்தேவை நிறைவேறவில்லை என்று புகார் கூறினோமே அவரிடமே அந்த புகார் மனு போய்ச்சேரும். அவரும் அதை வாங்கி பத்தோடு பதினொன்றாக வைத்து, நாம் சென்று கேட்கும்போது கடுகு போட்டால் வெடிக்கும் முகத்துடன் மனு குடுத்திருக்கிறீங்க பதில் வரும் போங்கள் என்று விரட்டுவார். ஒருமாதம் கழித்து கசங்கி கிழிந்த மட்டித்தாளில் ஒரு பதில் வரும்.! தங்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் மேல் உத்தரவு வந்தால் நிறைவேற்றப்படும் என்று இருக்கும். அடுத்து ஒரு மாதம் காத்திருந்து மீண்டும் மனு, மீண்டும் பரிசீலனை, மீண்டும் மட்டித்தாள்!
இப்படிபட்ட அனுபவம் ஒரு அலுவலகத்தில் மட்டுமல்ல. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முதல் தலைமைச்செயலகம் வரை அனைத்து அலுவலகங்களிலும் இதே நிலை! இங்கெல்லாம் ஐ.ஏ.எஸ் பட்டத்தை கொட்டை எழுத்துக்களில் பொறித்த பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நான் சொல்லிய இலக்கணத்துக்குள் வருபவர்கள். ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் இறுதி முடிவில் மாற்றமில்லை. பொதுவாக ஒரு சமூக அக்கறையுள்ள ஒரு இளைஞனை தாலுக்கா ஆஃபீசுக்கு சாதிச்சான்றிதழ் பெறவும், வருமானச்சான்று பெறவும் மூன்று நாட்கள் போய்வரச் சொல்லுங்கள் கொதிநிலையில் இருப்பான். அடுத்து ஒரு பட்டா மாற்றம் செய்யும் மனுவை கொடுத்து அனுப்புங்கள். அவன் நக்சலைட் ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளும் பிரகாசம்! துப்பாக்கி மட்டும் கிடைத்தால் போதும்!
முன்னர் சொன்னது போன்ற முற்போக்கு சிந்தனையுடன் வளர்ந்த நான் இருபத்துஓரு விதமான சான்றுகளை பெற பல்வேறு அலுவலகங்களுக்கு எண்ணற்றமுறை சென்றிருக்கிறேன். இந்த அலுவலகங்களுக்கெல்லாம் எனது சட்டபூர்வ உரிமையைப் பெற ஓராண்டு ஈராண்டு அல்ல ஒன்பது ஆண்டுகள் அலைந்திருக்கிறேன்! இறுதியில் ஒருமுடிவெடுத்துஅவர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். "நீங்கள் எனக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை தர வேண்டாம். நான் தகுதி அடப்படையில் அரசு வேலை பெற்றுக்கொள்கிறேன்." அதன் பிறகே இந்த புனித வட்டத்தை தொட்டுப்பார்க்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வந்தேன்.
சிவில் சர்விசஸ் தேர்வில் எளிதில் தேர இயலவில்லை. (இதன் உள்அரசியல்குறித்து பின்னர் ஒருபதிவில் எழுதுகிறேன்.) ஆனால், என் திறமையின்மூலம் மட்டும் அடுத்தடுத்து 6 அரசுப்பணிகளை பெற்றேன். முதல் பணி நியமனம் பெற்று பணியில் சேர்ந்தஅன்று மாலை அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எனக்கு கருணை அடிப்படையில் வேலை வேண்டாம். என்மீது காட்டிய கருணைக்கு நன்றி என்றுகூறி என் பணிக்கோரிக்கைமனுவினை திரும்ப பெற்று வந்தேன்.
இவை என் தொடக்க கால அனுபவங்கள். இதன் பின்னர் 6 அரசுத்துறைகளில் 10 பணியிடங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஏராளமான அனுபவங்கள்! பல ஐ.ஏ.எஸ் அலுவலர்களுடன் நெருங்கி பணியாற்றும் வாய்ப்புகள். இந்த ஐ.ஏ.எஸ் ஒளி வட்டம் உண்மையில் ஒன்றும் புனிதமானது அல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள். அதையெல்லாம் வெளிப்படையாக கூற விரும்பவில்லை. இருப்பினும் இன்னும் பொதுமக்கள் மீட்பராக பார்க்க இந்த பதவிகளில் என்ன கவர்ச்சி உள்ளது?
துரைமாரே.... சகாயம் பண்ணுங்க!
இந்திய குடிமைப் பணிகள் (ஐசிஎஸ்) என்பவை ஆங்கிலேயர்களால் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்த ஏற்படுத்தப்பட்டவை. உயர் பதவிகளில் ஆங்கிலேயர் மட்டும் இருந்த காலத்தில் அதற்கு வசதியாக தேர்வு செய்ய உருவாக்கப்பட்டதே சிவில் சர்வீசஸ் தேர்வு. பிரிட்டனில் இதுபோல் நேரடியான உயர் பதவித் தேர்வுகள் இல்லை. அந்த காலனி ஆதிக்க பாரம்பரியம் இன்னமும் அப்பதவிகளில் இருக்கிறது. நாம் எப்படி ஆங்கில துரைமார்களிடம் சகாயம் கேட்டு இறைஞ்சினோமோ அதே போன்ற மனநிலை இப்பொழுதும் பொதுமக்களிடம் உள்ளது. அந்த பதவிகளில் ஆக்கிரமித்திருப்பவர்களின் நிறம்தான் மாறியிருக்கிறது. இன்னும் மனநிலை மாறவில்லை என்பதே எதார்த்தம். இதில் சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் மிகச்சிறு சிறுபாண்மையினர்.
சேவையா? கடமையா?
சிவில் சர்விசஸ் தேர்வுக்கு வரும் பலர் மக்களுக்கு சேவை செய்தே இலட்சியம் என்று கூறிவருகின்றனர். சிலர் சேவையாற்ற முனைகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களால் இலட்சியம் நீர்த்துப்போய்விடுகிறது.
அதிகாரியாகி நான் சேவையாற்றுவேன் என்று சொல்வதே சரயானதா என்று ஒருகேள்வியுண்டு! சேவை என்பது எந்த பலனையும் எதிர்பாராமல் எந்த கைமாறும் பெறாமல் மக்களுக்கு உழைப்பதே சேவை! சிவப்பு விளக்கு பொருத்திய கார்(இப்பொழுது நீல விளக்கு), நல்ல வசதியான பங்களா, வீட்டுப்பணிகளை பார்க்க பணியாளர்கள், இவற்றோடு கை நிறைய சட்டபூர்வமான (!) சம்பளம் இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு தான் செய்வது சேவை என்று சொன்னால் எப்படி?!!!
பிறகு கீழ்க்கண்டவர்கள் செய்தற்கு என்ன பெயர்?
கடைசிவரை இந்தியா முழுவதும் பதிமூன்று ஆண்டுகள் இடைவிடாமல் நடந்து 45 இலட்சம் ஏக்கர் நிலத்தை பூதானமாக பெற்றவர் வினோபா பாவே!
மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் சிப்கோ இயக்கத்தை நடத்திய பழங்குடியினப் பெண்கள்; அவர்களுக்காக போராடிய சுந்தர்லால் பகுனா!
வெயில் சுட்டெரிக்கும் இராஜஸ்தான் பாலைவனத்தில் 36 ஆயிரம் ஏரிகளை வெட்டி 6 ஆறுகளில் நீர் ஓடச்செய்த இந்தியாவின் நீர்மனிதன் இராஜேந்திர சிங்!
இயற்கை வேளாண்மைக்காகவும் வேளாண் மக்களின் நிலத்தடிநீர் உரிமைக்காகவும் கடைசிவரை நடந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்!
இவர்களுக்கு நீல விளக்கு கார் இல்லை, பங்களா இல்லை, பணியாளர் இல்லை, சம்பளமும் இல்லை.! இதையெல்லாம் பெற்று இதற்குமேலும் வசதிகளை அனுபவித்து "சேவை" செய்வதாக கூறினால்; இது எதுவுமே பெறாமல் மேலே சொன்னவர்கள் செய்தவற்றை என்னவென்று சொல்வது?!!!
எனவே சிவில் சர்வீசஸ் பணியாளர்கள் செய்வது எதுவும் இலவச சேவையெல்லாம் இல்லை. அது அவர்கள் வேலை. அவர்களின் வேலையை ஒழுங்காக செய்வதையே பெரும் சேவையாக சித்தரிப்பதில் சமர்த்தர்கள்! உண்மையில், சிவில் சர்வீசஸ் பணியாளர்களுக்கு கடமைகளும் பொறுப்புகளுமே உள்ளன. அதிகாரம் என்று ஒன்று இல்லை. அதைத்தாண்டி அதிகாரம் என்று தோன்றுபவை உண்மையான அதிகாரங்கள் அல்ல. அவை அதிகார மீறல்கள் அல்லது கடமை தவறுதல்களாகவே இருக்கும் என்று நாங்கள் குருவாக மதிக்கும் ஓய்வு பெற்ற டிஜிபி திரு.சி.எல்.இராமகிருஷ்ணன் ஒருமுறை கூறினார். உண்மையும் அதுதான். ஆனால் கசப்பான உண்மை! இதற்கு விளக்கமளிக்கும் பொருட்டு காவல் துறையின் அதிகாரத்தைப் பற்றி சில வினாக்களை அவர் கேட்டார்.
ஒரு தவறும் செய்யாதவனை உங்களால் கைது செய்து சிறையில் தள்ளமுடியுமா? தவறு செய்த ஒருவனை நீங்களாக தப்பிக்க விட்டுவிட முடியுமா? உங்களிடம் அளிக்கும் புகார் உங்களின் நண்பர்மீது குற்றம் சுமத்துகிறது என்பதற்காக சட்டபூர்மற்றமுறையில் நீங்கள் அவருக்கு உதவமுடியுமா? உங்களுக்கு எவ்வயைிலும் தெரியாதவர் என்பதால் அவரின் சட்டபூர்வ புகாரை வாங்காமல் அலைக்கழிக்க முடியுமா?
சட்டபூர்மாகவும், அறநெறிப்படியும் பதிலளித்தால் எதற்கும் "முடியாது" என்பதே பதில்.! ஆனால், நடைமுறை என்ன? அப்படியானால், அதிகாரமாகத் தோன்றுவது உண்மையில் அதிகாரமா அல்லது அதிகார மீறலா?
ஏன் சிவில் சர்வீசஸ்?
பிறகு ஏன் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினாய் என்று நீங்கள் வினவலாம்! தேர்வே எழுதாமல் சொன்னால் முடியாதவன் சொல்கிறான் என்பர்! தோல்வியடைந்தபின் சொன்னால் தோற்றவன் சொல்கின்றான் என்பர்! எனவே இதைச் சொல்வதற்குகூட சிவில் சர்வீசஸ் தேர்வு பெற்று தகுதிபடுத்திக் கொள்ள வேண்டியதாய் உள்ளது! இப்பொழுது தகுதி பெற்றதால் சொல்கிறேன்.
ஆனால், சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு இன்னும் சில தளங்களில் முக்கியத்துவம் உள்ளது. இவர்கள் தங்களின் கடமையை சரியாகச் செய்தாலே பெரும் தெய்வமாகிவிடுவர்! சரி, இதில் அதிகார மீறல்கள், கடமை தவறுதல்கள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பும், அப்படி செய்பவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பும் இதே சிவில் சர்வீசஸ் அலுவலர்களுக்கே உள்ளது. அந்த புனித வட்த்துக்குள் உள்ளவர்ககளை வெளிக்கரம் தீண்ட இயலாது! அதையும் தாண்டி அரசின் கொள்கை வகுப்பவர்களுக்கு உதவி செய்யும் பொறுப்பும் இவர்களுக்கு உள்ளது. இந்த நிலையில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாரத்தால் சிவில் சர்வீசஸ் உள்ளிட்ட உயர் அதிகாரவர்க்கம் யாருக்காக செயல்படுகிறது என்று தெரியும்.
சில அதிகார வர்க்க சேவைகள்: உதாரணங்கள்!
நாள் ஒன்றுக்கு இருபத்து ஆறு ரூபாய் வருமானம் வந்தால் அவர் ஏழையில்லை என்று சொல்லிய அதே அலுவலகத்தில் கழிப்பறைகளை புதுப்பிக்க 35 இலட்சம் ஒதுக்கீடு! அதே வேளையில் கழிப்பறைகளற்ற மக்களுக்கு கழிப்பறை கட்டிக் கொள்ள வீட்டுக்கு ரூபாய் ஐயாயிரம் என்று தாராள ஒதுக்கீடு!
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தாருங்கள் என்று கேட்டு பாராளுமன்ற சாலையில் தான் விளைவித்த நெல்லைக் கொட்டி போராடியவர்கள் மீது பொது இடத்தை அசிங்கப்படுத்தியதாக சிறை!
ஏக்கர் கணக்கிலான நிலங்களை சொற்ப ரூபாய்களுக்கு நூறு ஆண்டுகள் குத்தகை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஆனால் ஒரு வீட்டு மனைப்பட்டாவுக்காக அலைந்து அலைந்து ஓயும் ஆயிரமாயிரம் மக்கள்!
கல்விக்கடன் வாங்கி கட்டமுடியாதவர்களின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனர் வைத்தும் பத்திரிக்கைகளில் போட்டும் அவமானப்படுத்தும் விதிமுறை கடுமை! ஆயிரம் கோடிகள் வாங்கியபிறகு மஞ்சல் நோடிஸ் கொடுப்பவர்களுக்கு " வில்ஃபுல் டீஃப்பால்டர்" என்ற மரியாதை செற்றொடரால் அழைக்கும் பொருளாதாரப் பெருந்தன்மை!
இங்கெல்லாம் அதிகார வர்க்கம். தனக்கு எஜமானர்கள் இடும் பணிகளை சிரமேற்கொண்டு செய்ய தயாராக நிற்கிறது! நான் முன்னர் கூறிய சமூக போராளிகள் யாருக்கு எதிராகப்போராடினர்? அவர்களை அடக்கி ஒடுக்க களத்தில் முன்னே நின்றது எது? இதே அதிகார வர்கம்தான்!
இங்கு ஏழை சொல் அம்பலம் ஏறாது!
ஒடுக்கப்பட்டவன் குரல் ஓங்கி ஒலிக்காது!
பட்டிக்காட்டான் விருப்பம் பட்டனம் போகாது!
ஏழை சொல் அம்பலம் ஏறவேண்டுமெனில் ஏழையே அம்பலம் ஏற வேண்டும்!
ஏறிய பின்னரும் அவன் ஏழை படும் பாட்டினை உரத்துச் சொல்ல வேண்டும்!
பட்டிக்காட்டானாக உள்ளே செல்பவன் பட்டின மயக்கங்களில் வீழாமல் கிராமத்தவனின் துயரங்களைப் பேச வேண்டும்!
சிவில் சர்வீசஸ் பணியை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு கோரிக்கை:
நம்மை நோக்கி உருண்டு வரும் பெரும் பாறைகளைத் தடுக்கும் சிறு தடைக்கற்களாவோம்!
நம்மை அழுத்தும் பெரும் பாறைகளை துளைத்து பிளக்கும் சிற்றுளிகளாக இருப்போம்!
இந்த சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு இருக்கும் புனிதத்தன்மையை போக்கி வெகுஜனப்படுத்துவோம்!
நீங்கள் மேலே ஏறி வந்திருக்கலாம்! இன்னும் ஏறவேண்டியவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்!
இதற்குத்தான் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு நான் வந்தேன்! மற்ற எதற்காகவும் அல்ல.!
பின் குறிப்பு:
நான் மேலே சொல்லியவற்றில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்.விதிவிலக்குகள் இருக்கலாம். அவை ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளைப் பொறுத்ததே.!
நன்றிகளுடன்...
க.இளம்பகவத்
No comments:
Post a Comment