Saturday, November 19, 2016

மாவட்ட ஆடசியர் திரு.சகாயம்


முதல் முறையாக கோ-ஆப்டெக்ஸுக்கு 2 தேசிய விருது
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விவசாயிகளால் நடத்தப்படும் உழவன்  உணவகம்

எல்லா பெருமையும் திரு. சகாயம் இ.ஆ.ப. அவர்களைச் சாரும் சாரும்.

கோ-ஆப்டெக்ஸுக்கு 2 தேசிய விருது: 75 ஆண்டுகளில் முதல் முறையாக கிடைத்திருக்கிறது.

கைத்தறி உற்பத்தி மற்றும் கைத்தறித் துறையில் மகத்தான பங்களிப்பிற்காக முதல் முறையாக 2 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். 1256 கூட்டுறவு சங்கங்களைக் கொண்ட, ஆசியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ். நாடு முழுக்க 200 இடங்களில் இதன் ஷோரூம்கள் செயல்படுகின்றன. 1999க்கு முன்பு வரை லாப நஷ்டமின்றி செயல்பட்ட கோ-ஆப்டெக்ஸ் அதற்குப் பிறகு நஷ்டப்பாதையில் நடைபோடத் தொடங்கியது. கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக உ.சகாயம் பொறுப்பேற்ற பிறகு, கைத் தறி சேலை மற்றும் துணிகளை தயா ரிப்பதில் புதுமைகளைப் புகுத்தினார். இதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டிலிருந்து மீண்டும் லாபப்பாதைக்கு வந்தது கோ-ஆப்டெக்ஸ்.

கடந்த ஆண்டு மட்டும் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் பார்த்திருக்கிறது. இதில் லாபம் மட்டுமே ரூபாய் ரெண்டே கால் கோடி! இதில் ஒரு கோடியை கைத்தறி நெசவாளர்களுக்கே ஊக்கத் தொகையாக வழங்கி உற்சா கப்படுத்தினார் சகாயம். அடுத்த கட்டமாக, கைத் தறித் தயாரிப்புகளோடு விலைப் பட்டியலுடன் சேர்ந்து அந்தத் துணியை நெய்த நெசவாளியின் புகைப்படம், பெயர், அந்தத் துணியை நெய்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள், உடல் உழைப்பு பற்றிய விவரங்களையும் தனி அட்டையில் அச்சிட வைத்திருக்கிறார். முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த நெசவாளிகள் 100 பேர் நெய்து கொடுத்த சேலைகள் அவர்களைப் பற்றிய விவர அட்டையுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில் 2013-ல், அதிக கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்ததற்காகவும் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் 2 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற கோ-ஆப்டெக்ஸ், உற்பத்திக்கான விருதை பெற்றது கடந்த 75 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. டெல்லியில் நடந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவ ராவ் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திடம் விருதுகளை வழங்கினார். விருது பெற்றதற்காக சகாயத்திற்கும், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் மாநில கைத்தறித்துறை அமைச்சர் சுந்தரராஜ் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தேசிய விருதுகள் பெற்றது குறித்து சகாயம் இந்த மகத்தான தேசிய விருதுகளை ஏழை, எளிய கைத்தறி நெசவாளிகளுக்கு அர்ப்பணிப்பதில் கோ-ஆப்டெக்ஸ் பெருமை கொள்கிறது. இந்த நிதி ஆண்டுக்கான விற்பனை இலக்கு ரூ.300 கோடி. ரூ.203 கோடி விற்பனையை எட்டிவிட்டோம். பொங்கல் திருநாளுக்குள் ரூ.70 கோடி விற்பனையை எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

உழவன்  உணவகம்
===================

சாகுபடி செய்வதைக் கைவிடும் நிலையில் இருந்த விவசாயிகளுக்காக, மதுரை ஆட்சியராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொண்டு வந்த திட்டம் இது. பொதுமக்களுக்கு ஆரோக்கியம், விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலைதான் இதன் தாரக மந்திரம். இங்குள்ள உணவு வகைகளின் அதிகபட்ச விலையே ரூ. 25 தான். கடைக்கு வாடகை கிடையாது.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யத்தான் உழவர் சந்தைகள். இது ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே' என்றபடி நாமக்கல் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கியிருக்கிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயம். முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளிலும் இதை ஆரம்பிக்கும் வேலைகள் நடக்கின்றன.

காலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது நாமக்கல் உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் சூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

இங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்டு சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த உணவுகளை சமைத்து விற்பனை செய்கின்றனர்.

"முடக்கத்தான் தோசை, முள்முருங்கை தோசை, தூதுவளை தோசை, ஆவாரம்பூ தோசை, மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை, கருவேப்பிலை பொடி தோசை, இஞ்சி பூண்டு மசால் தோசை என்று தோசையிலேயே 20 வகைகள் இங்கே கிடைக்கும்.

குறிப்பிட்ட சில உணவு வகைகளின் சமையல் குறிப்புகளை வாடிக்கையாளர்கள் கேட்டுச் செல்கிறார்கள். “அவற்றைச் சொல்லிக் கொடுப்பதுடன், தேவையான நவதானிய மாவு, ரெடிமிக்ஸ்களையும் வழங்குகிறோம்” என்கிறார் இங்கு கடை வைத்துள்ள விவசாயி ராஜேஷ். இந்த உணவகத்தின் மற்றொரு சிறப்பம்சம், ரீபைண்ட் ஆயிலைச் சமைக்கப் பயன்படுத்துவது இல்லை.

ஒரு முறை கொதிக்க வைத்த எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது என்பது அறிவியல் உண்மை. ஆனால், கொதிக்க வைத்துத்தான் ரீபைண்ட் ஆயிலே தயாரிக்கப்படுகிறது. “இங்கு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

செக்கு எண்ணெயை விற்பனையும் செய்கிறோம்”என்கிறார் இங்கே கடை நடத்தும் மற்றொரு விவசாயி பெருமாள். தினை சேவு, வரகரிசி முறுக்கு, சாமை பிஸ்கெட் என்று சிறுதானிய இனிப்பு, கார வகைகள் இங்கே கிடைக்கின்றன. கிலோ 160 ரூபாய்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம்பேசும்போது, “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று ஆலோசனை சொன்னார்

No comments:

Post a Comment