Thursday, November 17, 2016

நம் குழந்தைகளுக்காக...

நாளை பிறக்க போகும் எம் குழந்தைகளுக்காக
-மு. நியாஸ் அகமது.

எழுதுவது எப்போதும் அயற்ச்சியை தருகிறது… விளைவுகளுக்காக எழுதுகிறோம் ஆனால் நம் எழுத்து எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லைஎன்னும் போது பெருங்கோபம் தான் வருகிறது ஆனால் இப்போது எழுதிதான் ஆக வேண்டும்… இது எனக்காக அல்ல… இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…. நாளை பிறக்க போகும் என் குழந்தைகளுக்காக… இன்று பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகளுக்காக…

தொடர்ந்து நம்மாழ்வார் அய்யாவுக்காக கூட்டங்கள் ஏற்பாடு செய்வது… கூட்டங்களில் கலந்து கொள்வது என கடந்த பத்து நாட்களும் கழிந்து விட்டது…. நம்மாழ்வார் அய்யாவுக்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்வதுடன் நம் கடமைகள் முற்றுபெற்றுவிட்டதா…? முத்துகுமாருக்கு வருடா வருடம் கூட்டங்கள் நடத்துவது போல், நம்மாழ்வார் அய்யாவுக்கும் இனி வருடா வருடம் கூட்டங்கள் நடத்திவிட்டு நம் கடமைகளிலிருந்து தப்பித்து கொள்ள போகிறோமா….? ஆம்... என்றால், நாம் அய்யாவுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை உங்கள் குழந்தைகளுக்கும் தான் துரோகம் செய்கிறீர்கள்…!!!

என் தாத்தானும், பாட்டனும் இயற்கையை சுரண்டவில்லை அதுனுடன் இயைந்து வாழ்ந்தார்கள் எனக்கு இயற்கையை மிச்சம் வைத்தார்கள்… என்னுடைய ஆரோக்கியம், அவர்களிடமிருந்தே பெறப்பட்டது ஆனால் நாம் என்ன செய்கிறோம்… இயற்கையை சுரண்ட மட்டும் செய்யவில்லை .. புல்டோசர்களையும், பொக்லைன்களையும் கொண்டு இயற்கையை பேர்த்து எடுக்கிறோம்… நாம், நம் குழந்தைகளுக்கு விட்டு செல்வது தீரா பிணியை மட்டும் தானா….????

பெருநிறுவனங்கள் பெரும்பசிக் கொண்டு, எம் காடுகளை அழிக்கிறது…. எம் மணல் வளம், தாது வளம்… எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பசிக்கு இரையாகிறது… உலகில் உள்ள ஒரு முப்பது பெருநிறுவனங்கள் உலகின் மொத்த வளத்தையும் ஆள்கிறது…. உலகில் உள்ள 3 சதவீத முதலாளிகளின் சந்தோஷதிற்காக மீதாமுள்ள 97 சதவீத மக்களும் 16 மணி நேரம் உழைத்துகொண்டிருக்கிறார்கள்… இது எதுவும் பொய்யல்ல நண்பர்களே… சந்தேகம் இருந்தால் ஜான் பெர்கின்ஸின் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ படியுங்கள் (confession of an economic hit man – John Berkins)…!!!

அரசுகள் வெளியிடும் வளர்ச்சியின் சதவீத கணக்குகள் எல்லாம் நான்கு முதலாளிகளின் வளர்ச்சி கணக்கு தோழர்களே… சாமானியர்களின் கண்க்கு அல்ல…உழவன் சொந்த நிலத்தில் விளைந்த நெல்லை கடையில் விற்றுவிட்டு, அவனை ரேசன் அரிசி சாப்பிட வைத்தது தான் நம் அரசுகளின் வெற்றி…!!!

சரி… ஆட்சியை மாற்றிவிடலாம்… மன்மோகனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மோடியை அழைத்து வரலாம்…எல்லாம் மாறிவிடும் என்று நம்பிக்கை கொண்டவராக நாம் இருந்தால்… நம்மைவிட முட்டால் வேறு யாரும் இல்லை…!!!

மன்மோகன், மோடி, காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக … ஏன் கம்யுனிஸ்டுகள் உட்பட … அனைத்து அரசியல் கட்சிகளும் TATA, Reliance, Jindal, Vethantha ஆகியோரின் பிரதிநிதிகள் நண்பர்களே…!!!

சரி… வேறு என்ன தான் செய்வது…? அயுதங்கள் கொண்டு இவர்களை எதிர்த்து போராடுவது தான் தீர்வா…? நிச்சயம் இல்லை… நூறு சதவீதம் ஆயுதம் தீர்வல்ல… நீங்கள் ஆயுத புரட்சி தான் தீர்வென்று நினைத்தால் மீண்டும் உங்கள் ஆயுதங்களுக்கு வேறு ஒரு முதலாளியை தான் சார்ந்து இருக்க வேண்டும் நண்பர்களே…!!!

தீர்வு மிகவும் எளிமையானது… தீர்வு எப்பொதும் சுலபமானது… அது சுலபமாக இருக்கும் ஒரே காரணத்தால் அதை நாம் தீர்வாக கருதுவது இல்லை…??? 

தீர்வு உங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது… பொருட்களை வாங்கி குவிக்காமல் இருப்பதே இதற்கெல்லாம் ஒரே தீர்வு… எப்படி ITC சிகிரெட் புகைத்துக்கொண்டே , ITC நிறுவனத்தை எதிர்ப்பது எவ்வளவு முட்டாள் தனமானது…? அதுப்போல் தான் நண்பர்களே… பொருட்களே வாங்கி குவித்துக் கொண்டே, நாம் மாற்றத்தை எதிர்பார்ப்பதும்…!!!

இனி நீங்கள் ஆடை எடுக்க போனால், நொய்யல் ஆற்றை நினைத்து கொள்ளுங்கள்…. வாகனத்திற்கு பெட்ரோல் போட போனால், ஈராக்கில் போரில் முடம் ஆகிப்போன மூன்று வயது சிறுவனை நினைத்துக்கொள்ளுங்கள்….!!!

தயவு செய்து தேவை இல்லாமல் பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்….!!! முதலில், நீங்கள் வாங்கிய பொருட்கள் உங்களுக்கு மகிழ்வை தருகிறதா…? முன்பெல்லாம்… நம் சேமிப்பை வைத்து யார் செல்வந்தர்கள் என்று மதிப்பிடுவோம்… ஆனால் இப்போது…? யாரிடம் அதிகம் கடன் அட்டை (credit card) உள்ளதோ அவர்கள் தான் செல்வந்தர்கள் என மதிப்பிடுகிறோம்… 

நண்பர்களே… இது முட்டால் தனமாக இல்லை…???

முதலில், உங்கள் வீட்டு கணக்கை எழுதுங்கள்… ஒரு மாதம் உங்கள் வீட்டு கணக்கை எழுதி, மாத இறுதியில் பாருங்கள் நாம் எவ்வளவு வெட்டியாக செலவு செய்கிறோம் என்பது தெரியும்…? 

நம்முடைய நுகர்வு வெறி தான்… இப்போது நடக்கும் பல போர்களுக்கு காரணம் நண்பர்களே… நாம் பயன்படுத்தும் Mobile phone தயாரிக்க தேவைப்படும் Coltan என்னும் மினரலுக்காக congo தேசம் அழிக்க படுகிறது தோழர்களே…!!! மொபைல் ஃபோன் தேவை தான்,அது அத்யாவசிய பொருள் தான் ஆனால் எத்தனை ஃபோன்… இன்று ஒவ்வொரு நபரிடமும் குறைந்தது இரண்டு ஃபோகள் உள்ளது… 

உங்கள் கையில் உள்ளது ஃபோன் இல்லை நண்பர்களே… காங்கோ தேசத்து மக்களின் குருதி கட்டி… உங்கள் கையை நுகர்ந்து பாருங்கள் நிச்சயம் குருதி நாற்றம் எடுக்கும்…!!!

பொது போக்குவரத்தை பயன்படுத்த பழகுங்கள்…. ஆண்டுக்கு மூன்று ஆடைகள் மட்டும் எடுங்கள்… தேவையற்ற… பெருமைக்காக… எந்த GADGETS யும் வாங்காதீர்கள்…!!! தேவையான அளவு மட்டும் சம்பாரியுங்கள்…!!!

உங்கள் மனைவியையும்… உங்கள் குழந்தைகளையும் … உங்கள் பெற்றோரையும் பிரிந்து ஏதோ ஒரு தேசத்தில் நீங்கள் உழைப்பது… நிச்சயம் உங்களுக்காக அல்ல… ஏதோ ஒரு முதலாளிக்காக என புரிந்து கொள்ளுங்கள் அதில் உள்ள நுண்ணரசியலை புரிந்து கொள்ளுங்கள்…!!!

வாழ்கை வாழ்வதற்கு… மகிழ்வுடன் வாழ்வதற்கு…!!! நீங்கள் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், கடைசியாக நீங்கள் உங்கள் மனைவியுடன் உணவு உண்டது எப்போது….? உங்கள் குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றது எப்போது…? நிச்சயம் நினைவிரிக்காது… Projects, deadline என உங்கள் கால்கள் உங்கள் முதலாளிகால் கட்டப்பட்டுள்ளது…? 

சரி… பணமே வேண்டாம் என்று சொல்கிறாயா…? என நீங்கள் கேட்பது, எனக்கு கேட்கிறது… பணம் வேண்டும் தான்…நிச்சயம் பணம் வேண்டும்… ஆனால் நீங்கள் சம்பாரிக்கும் பணம் உங்களுக்கு மகிழ்வை தருவதாக இருக்க வேண்டும்… உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாரித்திவிட்டால்… உங்கள் வேலையை முதலில் விடுங்கள்… உங்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள்… உங்களுக்கு எது விருப்பம் என்று யோசியுங்கள்… அதை மகிழ்வுடன் செய்யுங்கள்… இசையில் ஆர்வமா இசைஞன் ஆகுகங்கள்… கவிதை எழுத விருப்பமா… கவிதை எழுதுங்கள்… நிச்சயம் தெரியவில்லை… எத்தனை கலீல் ஜிப்ரான்கள் program testerஆக, programmerஆக ஒருமுதலாளிக்கு சேவை செய்து கொண்டிருக்கிரார்கள் என்று…? எத்தனை Piccasso களை இந்த உலகமயம் கொன்றுள்ளது என்று….? எந்த முதலளிக்கும் சேவை செய்யாமல் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்…!!!

ஒரு விஷயம் நினைத்து கொள்ளுங்கள்.. Infosys, wipro, CTS, TCS போன்ற நிறுவனங்கள் வருவதற்கே முன்பே இந்த பூமியில் மனிதர்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள்… இந்த நிறுவனங்கள்… உங்களை இரட்சிக்க வந்த தேவதூதர்கள்… ஆதமிடம் பழத்தை கொடுத்த serpents…!!!

பொருட்களை நம்மிடம் நிறுவனங்கள் திணிப்பது நம் நலனுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்…!!! 

காந்திய வழி தான் தீர்வு தோழர்களே… நாம் நிறுவனங்களை எதிரிக்க வேண்டுமானால் அதை நாம் உதாசீனப்படுத்த வேண்டும்…!!! இது தான் தீர்வு… இது மட்டுமே தீர்வு…!!!

குருதி தொய்ந்த என் இதயத்திலிருந்துஎழுதுகிறேன்.. இந்த பிரபஞ்சத்தை நாம் மிகவும் காதலிக்கிறேன்… எனக்கு மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள்… இவ்வுலகம் என்னை பசியோடு என்றும் தூங்கவிட்டதில்லை… இதற்கு நான் எதுவும் திருப்பி தரவிட்டாலும் பரவாயில்லை… இருப்பதையாவது நாளை பிறக்க போகும் என் குழந்தைக்காக விட்டு செல்ல வேண்டும்…!!!

உங்கள் குழந்தைகள், நாளை எத்தகைய பூமியில் வாழ வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்…???

நமக்கு… நம் பாட்டனும், பூட்டனும் தந்ததை நாளை நம் குழந்தைகளுக்காக மிச்சம் வைப்போம்…!!!

No comments:

Post a Comment