Friday, November 18, 2016

மனநலம்

-உளவியல் ஆலோசனை FB-

வீணாகும் நேரத்தை மனநலம் பேணும் வண்ணம் பொழுதைக் கழிப்பது எப்படி. ?

நவீன உலகில் பாதி பேருக்கு நேரமே போதவில்லை. மீதி பேருக்கு நேரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. போர் அடிக்கிறது எனும் சொல் நவீனம் கண்டதாகும். . நேரம் போதவில்லை என்போரும் பல சமயம் போர் அடிக்கிறது என்பர்.

நமது நேரம் நமக்காகத்தான். ஆனால், பெரும்பாலான நேரத்தைப் பிறர்க்கு என ஒதுக்கி விடுகின்றோம். இதுதான் சமூக வாழ்க்கை. 
இந்நிலையில் நமது பொன்னான நேரத்தை வெட்டியாக வீணடிக்காமல் மனநல நோக்கில் பொழுதைக் கழிப்பது எப்படி. ?

சில வழிகள்..

காலையோ மாலையோ நடக்கவும்..தனியாக நடப்பதே நல்லது. நடை பயிற்சியின் போது பேசக் கூடாது. கவனம் முழுவதும் பாதத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

சக மனிதரிகளுடன் பொது தலைப்பில் அறிவுப்பூர்வமாக அரட்டை அடிக்கவும். நடப்பு அரசியல் பேசலாம். அறிவியல் பற்றிப் பேசுவது நல்லது. எந்தக் கருத்திலும் பிடிமானம் இருக்கக் கூடாது. உண்மைத் தேடலாக இருக்க வேண்டியது அவசியம்.

பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு பள்ளி சம்பவங்களை பற்றி பேசவும். பழைய துன்பம் பற்றிப் பேசும்போது இன்று அது நகைப்பாகும்.

பழைய காதல் அனுபவங்கள் மிகவும் நகைப்பை ஏற்படுத்தும். நம்மை ஜோக்கர் ஆகக் காட்டுகின்ற ஆற்றல் நமது பதின் பருவக் காதலுக்கு உண்டு. அதை அசைபோட்டு இரசிக்கவும்.

உங்கள் தேவைகளை நீங்களே நிறைவு செய்ய முயலுங்கள். துணி துவைப்பதிலிருந்து ஸ்திரி போடுவதிலிருந்து கார் கழுவும் வரை இறங்கி செயல் படுங்கள். மற்றோரை எதிர்ப்பார்பதில் ஏற்படும் டென்சன் குறையும்.

பூச்செடிகளை வளர்க்கவும். தொட்டிச் செடி என்றாலும் நல்லதே. அடிக்கடி அச்செடியை வருடி விடவும். அவற்றுடன் பேசவும். குறைந்தபட்சம் மானசீகமாக..

இடம் இருப்பின் காய்கறி செடிகளை வளர்த்துப் பராமரிக்கவும். உளப் பூர்வமாக அவற்றைக் கவனித்தால் சத்தான காய்களை செடி வழங்கும். செடி கொடிகளுக்கும் எண்ண ஓட்டம் இருக்கிறது.

செல்லப் பிராணிகளைக் கொஞ்சவும். பேசவும். உங்கள் பேச்சைக் கேட்கும் அளவு வந்து விட்டால் அது நண்பன் ஆகிவிடும். பிராணி அலர்ஜி என்றால் விட்டு விடவும். பறவைகளை வளர்க்கலாம். கூண்டி வைத்து அல்ல.. வெளியே மாடம் கட்டிப் பறவைகளை வர வழைத்து முகவரி தரலாம். மீன் தொட்டி வைத்து வண்ண மீன்களை வளர்க்கலாம்.

ஓடும் ரயிலை ரசிக்கவும். காட்சியும் ஓசையும் உங்களுள் ஏதோ ஒன்று செய்யும். தண்டவாளம் அருகில் இருப்போருக்கு சலிப்பு ஏற்படுத்தலாம். தொலைநிலை தேவை.

ஆடும் கோயில் யானையை நோக்கவும். அதன் ஒவ்வொரு அசைவும் ரசனைக்கு உரியவை. உண்பதும்.. கழிப்பதும் கூட. அவ்வமயம் அந்த யானை உங்களைப் பார்த்து ரசிப்பதை நீங்கள் அரிய வாய்ப்பில்லை.

பறக்கும் பறவையின் சிறகசைவுகளை உற்று நோக்கவும். பறவைகளுக்கிடையே ஒப்பிடவும். அழகியல் ரசனை கூடும்.

மழை வந்தால் அதைப் பார்த்தப் பார்த்து ரசிக்கவும். சூறாவளி மழை பல ரசனையை நமக்கு வழங்கும். இடி ஓசை இசையாக இரசிக்கவும். அமைதியான மழை எனில் வெளியே வந்து நனைந்து அனுபவிக்கவும். சளி பிடித்தால் இயற்கையிடம் இருந்து நீங்கள் விலகி விட்டீர்கள் என்று பொருள்.

குழந்தையைக் கொஞ்சி மகிழுங்கள். அது பேசுகின்ற பாணியிலேயே பேசுங்கள். எதுவும் தெரியாதது போல் நடியுங்கள். குழந்தையின் வலிமைக்குக் கீழே நீங்கள் இருக்க வேண்டும். அதனால் உங்களைக் குழந்தை நெருக்கமாக வைத்துக் கொள்ளும். இயல்பில் குழந்தைகளுக்கு அதிகார மனநிலை இருக்கிறது.

அமைதியான கோயில் மசூதி தேவாலயம் செல்லுங்கள். பண்டிகை, விழா நெருக்கடிகள் உங்களை டென்ஷன் ஆக்கி விடும். அந்நாட்களைத் தவிர்ப்பது நல்லது. சாதாரண நாளிலேயே செல்வது மனநலத்துக்கு நல்லது. நிதானம் அமைதியான வழிதான் கடவுளை அடையும் உண்மையான வழி.

கோயில் சென்று கடவுளை மட்டும் வணங்கிவிட்டு வராமல், கோயிற் கலை நுட்பங்களை கண்டு ரசிக்கலாம். நாத்திகர்களும் கோயில் சென்று கலை ரசனையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கையை பாகுபாடின்றி ரசியுங்கள். அனைத்து வண்ணங்களும், இசைகளும் இயற்கையில் அடக்கம். சிறிய கூழாங்கல் முதல் மலை கடல் வரை இதமானவை. துணிக் கம்பியில் தொங்கும் ஒரு துளி நீரும் பெரும் பள்ளத்தில் இருக்கும் கடலும் ரசனைக்கு உரியவையே. நம்மைச் சுற்றி இவ்வாறு பல இருக்கின்றன என்பதைக் கவனிக்கவும். துளிர், மொட்டு, செடி, பெருமரம்,தூசி படிந்த கண்ணாடி, பூச்சி எழுப்புகின்ற ஓசை, வட்டம் போடும் மின் விசிறி என எங்கெங்கு காணினும் அழகியலே..

ஒரு தாளில் ஏதாவது ஓவியம வரைந்து பாருங்கள். குறிப்பாக உங்கள் ஓவியத்தை. கார்டூன் போல இருக்கும். நகைப்பு வரும். 
பேப்பர் ஆர்ட் செய்துப் பார்க்கலாம்.

கவிதையை ஆழ்ந்துப் படியுங்கள். ஒரு கவிதையில் கவித்துவம் மிக்க வார்த்தை, வரி எது என்பதை சிந்தித்துப் பாருங்கள். நல்ல கவிதை உங்கள் மனதை இலேசாக்கி விடும். மனநலம் பேண கவிதை மிகச் சிறந்த வழி. உங்கள் பொறுமையை அளவிடலாம். ( அண்மைக் காலமாகக் கவிதை வாசிப்பு இல்லாததால் மக்களிடையே மூர்க்கம் மேலோங்கி வருகிறது.)

சிறுகதை படியுங்கள்.. நாவல் தேவையில்லை. காரணம் இன்றைய விரைவுலகில் நாவல் எடுபடாது. சிறுகதை நல்லது. இயலுவோர் நாவலை படிக்கலாம்.

இளையராஜா பாடல்களைக் கேட்டு மகிழலாம். அவரின் பல பாடல்கள் ஆன்மாவை வருடுபவை. அவற்றை மேலோட்டமாக ரசிக்கக் கூடாது. வினாடிக்கு வினாடி ரசிக்க வேண்டும். நுட்பமான இசை ஒலிகளில் நீங்கள் லைத்துவிடலாம். ஐம்பது நெருங்குவோர் கடந்தோர் பழைய பாடல்களைக் கேட்கலாம். எம் ஜி ஆர் பாடல்கள் தன்னம்பிக்கை தரும்.

கர்னாடக இசை கேட்பது நல்லது. தமிழிசை மிக நல்லது. புரிதலுடன் இசையை ரசிக்கலாம். மண் சார்ந்த பாடல்கள் (நாட்டுப் புறப பாடல்கள் ) கேட்கும் வாய்ப்பிருந்தால் கேட்டு ரசிக்கலாம். தனி கருவி இசை நிகழ்ச்சி மிக நன்று. குறிப்பாக, நாதசுரம், புல்லாங்குழல், சாக்ஸபோன் நன்று.

தரையில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் உடலுக்கு ஓய்வளித்து அறிவுக்கு வேலை தருபவை. ஆடுபுலி ஆட்டம், தாயம், கல்லான், செஸ், கேரம் நல்லது. சீட்டாட்டம் கேட்டது. (எந்தத் சூதாட்டமும் மனநலத்தைப் பாதிப்பவையே).

தொலைக் காட்சியில் சிரிப்பு நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். உண்மை என்பதை நீங்களே உணர்வீர். அதிலேய லயித்து விட்டால் கேடு தரும். (இது தொடர்பாக ஒரு பதிவை வழங்கி உள்ளேன், வேண்டுவோர் தேடித் பார்த்து படிக்கவும்.)

அதிகப் பட்சமாக இரண்டு மணிக்கு மேல் தொலைக் காட்சியை காணாதீர்கள். அதில் ஒரு மணிநேரம் செய்திக்கும் விவாத நிகழ்ச்சிக்கும் ஒதுக்கவும். ஒரு மணி நேரம் உங்கள் விருப்பம். அறிவியல், விலங்கியல் மற்றும் நகைச்சுவை சேனல்களைப் பார்ப்பது நல்லது. நெடுந்தொடர்களை பார்க்கக் கூடாது.(நெடுந்தொடர் கேட்டைப் பற்றி ஒரு பதிவை செய்துள்ளேன். பார்க்கவும்).

வானத்தைக் கொஞ்சம் நேரம் உற்று நோக்குங்கள். வினாடிக்கு வினாடி காட்சிகள் மாற மனை பிடிமானங்கள் இலகும். பூமியின் அனைத்து வண்ணங்களும் வானத்தில் இருப்பவையே. வானவில் தென்பட்டால் அது மறையும் வரை ரசிக்கவும். கதிரவன் தோற்றம் மறைவு முறையே மன எழுச்சியையும் அமைதியையும் தருபவை.

இவற்றில் உங்களுக்கு ஏற்புடைய செயல்களை மாற்றி மாற்றி செய்ய வேண்டும். ஓரிரண்டில் சுருங்க விடக் கூடாது. அது ஆபத்து.

குறிப்பாக மனத்தில் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment