அரசர் இன்றும் அவனை கவனித்தார் .அவன் மீது ஏனோ இனம்புரியாத கோபம் வந்தது.கடந்த சில நாட்களாக இது தினசரி நிகழ்வாக ஆகி விட்டது .தினமும் நகர் வலம் செல்லும்போது அவனை பார்ப்பதும் அவன் புன்னகையோடு பணிவாக தலை குனிந்து கை கூப்பினாலும் ஏனோ அவனை பிடிப்பதில்லை .அவனை பார்த்த கணத்திலிருந்து வெறுப்பும் கோபமும் எழ ஆரம்பித்து விடுகிறது .
இதனை ஒரு விஷயமாக விவாதிப்பதா என எண்ணியிருந்த அரசர் ,இது தினசரி நிகழ்வாக மனதில் அமைதியை தொலைக்கும் செயலாக மாறி வருவதை கவனித்து ,அவருடைய மந்திரியிடம் இது பற்றி கூறினார் .தகவலறிந்த மந்திரி அரசே இனி கவலையை விடுங்கள் உங்கள் மனநிலை மாறுவதன் காரணத்தை நான் கண்டு பிடித்துசொல்கிறேன் என பொறுப்பேற்று கொண்டார் .
அன்று மாலையே ஒற்றர்களை அனுப்பி அவனை பற்றி விபரமறிந்து கொண்டார் .அடுத்த நாள் அரசர் நகர் வலம் வரும்போது அவனை கவனித்தார் .அவன் அதேபோன்ற சிரித்த முகத்தோடு தலை தாழ்த்தி வணங்கினான் .அரசருக்குள் எந்த எண்ணமும் எழவில்லை .மிகுந்த ஆச்சர்யத்தோடு வந்து மந்திரியிடம் என்ன நிகழ்ந்தது என்று கேட்டார் .அதற்கு மந்திரி அரசே அவன் மர வியாபாரி. அவனிடம் நீண்ட நாட்களாக சந்தன மரங்கள் விற்காமல் தேங்கிவிட்டன .உங்களை பார்க்கும் போது அரசருடைய உறவினர்கள் யாராவது இறந்து போனால் நமது சந்தனக்கட்டைகளை எரிப்பதற்காக வாங்கிகொள்வார்களே என்ற எண்ணத்தோடு உங்களை பார்த்து வந்தான் .அவனுடைய எண்ணம் உங்களை சூழ்ந்து அவன் மீது வெறுப்பை விதைத்து விட்டது .இதை விசாரித்த்து அறிந்த நான் காசு கொடுத்து அவற்றை வாங்கி கோவிலுக்கு கொடுத்து விட்டேன் .அவன் அவை விற்று விட்ட மகிழ்ச்சியில் உங்களை எந்த எண்ணமும் அற்று வணங்கினான் என்றார் .
நமது எண்ணங்கள் நமது சூழலை மாற்றும் வலிமை வாய்ந்தவை.நல்ல எண்ணங்கள் நம்மை வாழ்விக்கும் .நாம் எதுவாக எண்ணுகிறோமோ அதனை அடைந்தே தீருவோம்.
-தழல் திருவண்ணாமலை-
No comments:
Post a Comment