Thursday, November 17, 2016

பெரியார் யார் ?

பெரியார் யார் ? அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என நக்கலாய் பேசுபவர்களுக்காகவும், வெறும் கடவுள் மறுப்பு மட்டும்மே பெரியாரின் கொள்கை என்று சொல்லுபவர்களுகாகவும் சில தகவல்கள்..........

1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் ஈடுபட்டவர்.

2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.

3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை அரசியல் கட்சியாய் மாற்றாதவர், அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணி செய்தவர். தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8200 நாட்கள் சுற்றுபயணம் செய்து சுமார் 11,000 நிகழ்ச்சி/கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால், மூத்திர வாளியை கையோடு பிடித்துகொண்டு சுற்றுபயணம் செய்து கூட்டங்களில் பேசியவர்.

4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர்.

5. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே மதத்தை தூக்கி எறிந்தவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னவர்.

7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர்.

8. ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான பகுத்தறிவுவாதி, பல பத்திரிகைகளையும் இதழ்களையும் நடத்தியவர்.

9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.

10. "பெரியார், புதிய உலகின் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி..." என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பால் பாராட்டப்பட்டவர்...

11. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர். பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.

12. தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ள ஆதரவளித்தவர்.

13. பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர். பெண்களை அடிமைபடுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர். "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார்.

14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.

15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.

16. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தவர், முதன்முதலாக திருக்குறள் மாநாடு நடத்தி, பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டுபோய் சேர்த்தவர். தெலுங்கு & சம்ஸ்கிருத சங்கீதத்துக்கு எதிராக தமிழிசைக்கு மேடை அமைத்து ஆதரவளித்தவர் தந்தை பெரியார்.

17. ஹிந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்தவர்.. 1937 ஆம் ஆண்டில் அதற்காக பல போராட்டங்களை செய்து, சிறைக்கு சென்றவர். தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தை பெரியார்.

18. மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தனது சொந்த தோட்டத்தில், ஏக்கர் கணக்கில் இருந்த தென்னை மரங்களை வெட்டிசாய்த்தவர்.

19. வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியவர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட ரீதியில் தடை வந்தபோது, கடுமையான போராட்டங்களை நடத்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில், முதல் திருத்தத்தமாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை கொண்டுவர வழிவகுத்தவர். அந்த சட்ட திருத்தத்தால் தான், இப்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & OBCக்கான இடஒதுக்கீடு சட்டப்படி செல்லுபடியாகிறது..

20. இந்தியா முழுதும் சமூக, கல்வி, வேலைவாய்ப்பில் புறகணிகப்பட்ட பெரும்பான்மையான மக்கள் தங்களின் உரிமையான இடஒதுக்கீட்டை சட்டப்படி பெற வழிவகுத்தவர் தந்தை பெரியார்

க.சுரேஷ் குமார்- FB

No comments:

Post a Comment