Thursday, November 17, 2016

நாத்திகர்களாக

இங்கே நாத்திகர்களாக இருக்கும் பலரும் தங்கள் குடும்பத்தினருக்காக, உறவுகளுக்காக, நண்பர்களுக்காக என அழைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு வருவார்கள், திருநீர் என்ற சாம்பலை நெற்றியில் பூசினால் ஏற்றுக்கொள்வார்கள், பிரசாதம் என்ற பெயரில் கொடுப்பவைகளை தின்னவும் செய்வார்கள்.

நாத்திகர்களின் பலரையும் கேட்டால் தெரியும் அவர்கள் விரும்பிய ஆணிற்காகவோ, பெண்ணிற்காகவோ, அவர்களின் வீட்டிற்காகவோ கோயிலில் தாலி கட்டி கூட திருமணம் செய்திருப்பார்கள்.

இவையெல்லாம் அவர்களின் கொள்கைக்கு எதிரானவை இல்லையா என்றால், கண்டிப்பாக எதிரானது தான். இருப்பினும் மற்றொருவர் மீதான அன்பிற்காகவும், அவர்களின் நம்பிக்கைக்காகவும், ஒருவரின் மனம் புண்பட கூடாது என்பதற்காகவும் செய்கிறார்கள்.

இதனால் அவர்களின் கொள்கை வலுவற்றது என்றோ, அவர்கள் தங்களின் கொள்கையை விட்டு விலகி விட்டார்கள் என்றோ எடுத்துக்கொள்ள முடியாது.

அவர்களை பொறுத்தவரை கொள்கை என்பது உள்ளிருக்கும் ஒன்று. மூளையில், மனதில் நிலைக்கொண்டிருக்கும் ஒன்று. ஆத்திகம் போல வெளிப்புறச் செயல்களை மட்டுமே சார்ந்த ஒன்றல்ல.

ஒரு நாத்திகரால் பகுத்தறிவோடு கோயில்கள் உருவாக்கப்பட்டதை கேள்விக்குட்படுத்த முடியும். கருவறையில் இருக்கும் சிலையோடும் கூட தர்க்கம் செய்ய முடியும் (ஆனால் எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது வேறு கதை).

இதே சூழலில் ஒரு ஆத்திகரை வைப்போம். நீங்கள் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டாம். "கடவுள் அத்தனை கருணை உள்ளம் கொண்டவராயிற்றே, நீ உன் விருப்பப்படி அவரை வணங்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டாரா?" என்று மட்டும் கேட்டால் போதும். நீங்கள் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி, இல்லாத கடவுளுக்காக உங்களோடு மிகவும் உணர்ச்சிவயப்பட்டு "அது அப்படிதான், என் நம்பிக்கை நான் செய்கிறேன். உனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. நீ ஏன் இதில் தலையிடுகிறாய்" என்று தீப்பிழம்பாய் கொதிப்பார்கள்.

ஏனென்றால் பயம். அவர்களின் நம்பிக்கை உடைந்துவிடும் என்ற பயம். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நாம் அழைத்ததற்காக கோயிலுக்கு வந்தவராயிற்றே அவர் என்ன தான் சொல்கிறார் என்று காதுகொடுத்து கேட்கும் நிதானமும், பக்குவமும் அவர்களிடம் துளியளவும் இருக்காது.

இதுவே நீங்கள் வணங்கும் கடவுளும், பக்தியும் உங்களுக்கு இதுநாள்வரையிலும் கற்றுக் கொடுத்திருக்கிறது. உணர்ச்சிகளை பின்னுக்கு தள்ளி இன்றிலிருந்தாவது சிந்திக்க தொடங்குங்கள். நமக்காகத்தான் கடவுளே அன்றி, கடவுளுக்காக நாம் இல்லை. நம்மை மீறி இங்கு எதுவும் இல்லை. உங்களை வருத்திக்கொண்டு, நீங்கள் முட்டாள்களாக இருக்கவேண்டியதில்லை.
Kiruba Munusamy

Nelson Xavier

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் அமைதியாக இருக்கலாம் அல்லவா, ஏன் கடவுளையும், மதத்தையும் தொடர்ந்து விமர்சிக்க வேண்டும் , அவமானப்படுத்த வேண்டும் ? எங்கள் நம்பிக்கைகளில் ஏன் குறுக்கிட வேண்டும் ?

இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் சிலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பக்தியை லாபமாக , வாக்காக , அதிகாரமாக மாற்ற நினைக்கிறவர்களுக்குத்தான் இது எப்போதும் தலையாயப் பிரச்சனை.

கடவுளை, பக்தியை, வழிபாடுகளை, உங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்பதென்பது பகுத்தறிவு என்கிற திமிரிலோ, தனித்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவோ , உங்களை சங்கடபடுத்தி அதன்வழி குரூர மகிழ்ச்சி கொள்ளவோ இல்லை. பகுத்தறிவின் அடிப்படையே மானுட நலனும் சமத்துவமும்தான்.

உங்கள் பக்தி எல்லோருக்குமானதாகவும் அன்பை, சமத்துவத்தை பரப்புவதாகவும் இருக்குமானால் அது குறித்து கவலையில்லை . ஆனால் மதங்கள் அப்படித்தான் இருக்கிறதா?

* பெரும்பாலான ஆண்களும் , ஒட்டுமொத்த பெண்களும் கடவுள் இருக்கும் கருவறைக்கு போக தகுதியில்லாததாக உங்களை ஒரு மதம் சொல்லுமானால், அதை ஏனென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* உலகின் சரிபாதி இருக்கும் பெண்களை ஆலய குருக்களாகவோ , ஒரு பெண்ணை போப்பாண்டவராகவோ தேர்ந்தெடுக்க பெண்களுக்கு தகுதியில்லை என்று ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏனென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

* ஒற்றை வார்த்தையில் திருமணத்தை முறிக்க கூடிய அதிகாரத்தை ஆணுக்கு கொடுக்கும் பாகுபாடு , பெண்களை தங்களின் விருப்ப வாழ்கையை தேர்ந்தெடுக்க உரிமை தராத ஒரு கட்டமைப்பு ,கடவுளை தொழும் மசூதிகள் , தர்காக்களில் எல்லாம் பெண்களை அனுமதிக்க முடியாது, நீங்கள் தனியே தொழுது கொள்ளுங்கள என்றெல்லாம் ஒரு மதம் சொல்லுமானால் அதை ஏன் என்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை இல்லை.

அன்பையும் சமத்துவத்தையும் தான் உங்கள் மதங்கள் போதிக்கிறதென்றால், வரலாற்றின் சிலுவைப்போர்கள் தொடங்கி , இஸ்லாமிய அடிப்படைவாத தற்போதைய வன்முறைகள் , இந்தியாவில் நடைபெற்று வரும் 
இந்து – இஸ்லாம், இந்து - கிறிஸ்தவ வன்முறைகள் வரை தொடர்வதற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா காரணம் ? மூடநம்பிக்கைகளில் சிக்க வைத்து, மனிதனை உருத் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கும் கருவி மதம் தவிர்த்த வேறு ஏதேனும் ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?

மதம், பக்தி, நம்பிக்கை இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருக்குமானால் , அது நான்கு சுவர்களுக்குள் இருக்குமானால் அதில் தலையிட நிச்சயம் யாருக்கும் உரிமையில்லை .

ஆனால் பிரம்மாண்ட மேடைகள் போட்டு முடமான கால்களை கடவுள் நடக்க வைக்கிறார் என பிரசங்கம் என்றபெயரில் மூளைச் சலவை செய்வதும்,
கடவுளின் சிலைகளை ஊர் முழுக்க சுற்றிசுற்றி வலம் வருவதன் வாயிலாக பெருமைப்படுவதும், 
மார்க்க விளக்க கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்துவதும் , 
பள்ளி, கல்லூரி ஒன்று விடாமல் எல்லா கடவுளர்களுக்கும் வாழ்த்து பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் , 
அடிப்படைவசதிகளான கழிப்பிடங்கள், மருத்துவமனைகள் , கல்வி நிலையங்கள் எல்லாவற்றையும் விட வழிபாட்டுதலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருக்குமானால் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. ஏனெனில் இதெல்லாம் நான்கு சுவர்களுக்குள் இல்லை; நாம் வாழும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

"இல்லை இல்லை இவையெல்லாம் எங்கள் உரிமை, நாங்கள் பின்பற்றியே தீருவோம் என்று சொன்னால் , உங்கள் தவறுகளை உங்கள் நலனுக்காக சுட்டிக் காட்டுவதும் எங்கள் உரிமையென்றே சொல்ல வேண்டி வரும் . "

" இல்லை இல்லை மதம் அப்படி எல்லாம் சொல்லவில்லை நீங்கள் தவறாகப்புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்வீர்களானால் , 
வன்முறைகளில் ரத்தம் பார்க்க ஆயுதம் ஏந்திய ஏந்தும் மதவாதிகளுக்கு,
கருத்து சொன்னதற்காக உயிர் பறிக்கும் அடிப்படைவாதிகளுக்கு முதலில் ஒழுங்காக உங்கள் மதத்தைப் பற்றி புரியவையுங்கள். அதற்குப் பிறகு கடவுள் மறுப்பாளர்கள் பற்றி கேள்வி எழுப்பலாம்." 
ஒரே கேள்வி மீதமிருக்கிறது.

சகமனிதனைக் கொன்று தீர்ப்பதன் மூலம்தான் உங்கள் கடவுள்களை மகிழ்விக்க முடியும் என்றால் அவரென்ன கடவுளா இல்லை கொள்ளைக் கூட்டத் தலைவனா ?

No comments:

Post a Comment