சுய கட்டுப்பாடு குறித்து இன்று நாம் நிறைய வாசிக்கிறோம். பேசுகிறோம். விவாதிக்கிறோம். நிறைய என்பதோடு, முக்கியத்துவமும் நம் பேச்சில் அழுத்தி கொடுக்கிறோம். சுய கட்டுப்பாட்டிற்கு அத்தனை முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமென்ன. நல்ல விஷயங்களாக கருதக்கூடிய ஒவ்வொன்றும், நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவையே. அந்த வகையில் சுய கட்டுபாட்டை இயற்கையான குணங்களில் ஒன்றாக அமைய பெற்றவர்கள், சுய கட்டுப்பாடு குணத்தை கைவர பெறாதவர்களை விட அதிக வெற்றி பெறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்மே நஞ்சாகும் போது, ஏனைய விஷயங்கள் மட்டும் அளவுக்கு மிஞ்சினால் என்னவாகும். எதுவும் அளவுக்கு மிஞ்சாத வகையில் இருக்க, நம்மை காப்பாற்றி கொள்ள சுய கட்டுப்பாடு தேவை. "எனக்கு மனக்கட்டுப்பாடு இல்லை. ஏனையோரை போல சுய கட்டுப்பாடுடன் வாழ என்னால் முடியவில்லை. நான் சுய கட்டுப்பாட்டுடன் வாழ விரும்புகிறேன்" என்று நிறையப் பேர் விரும்பலாம். இயற்கையாக நாம் கைவரப் பெறாவிடின், இதையொரு பயிற்சியாக செய்து நாம் பெற்றாக வேண்டும்.
சுய கட்டுப்பாடுள்ள, சுய கட்டுப்பாடற்ற என உள்ள இருவரின் வித்தியாசங்களை காணும் போது சில உண்மைகள் புரியும். சுய கட்டுப்பாட்டை பேணுவதிலுள்ள நன்மையும் புரியும். வழக்கமாக. காலையில் ஐந்து இட்லி சாப்பிடக்கூடிய ஒரு நபர், சட்னியோ, சாம்பாரோ சுவையாக இருக்கும் பட்சத்தில், மேலும் அதிகமாக இரண்டோ, மூன்றோ இட்லிகள் சாப்பிடக்கூடும். ஆனால் சுய கட்டுப்பாடுள்ள நபர் எவ்வளவு சுவையாக இருந்தாலும், தம் எல்லையை தாண்ட மாட்டார்.
"சாப்பிடுவது உழைக்கத்தான... உழைப்பது சாப்பிடத்தான். உணவு நன்றாக இருந்தால், சற்று அதிகமாய் சாப்பிடுவதில் தவறென்ன. இதில் என்ன சுய கட்டுப்பாடு வேண்டி உள்ளது" என்று சிலர் கேட்கலாம்.
அதற்கு சுய கட்டுப்பாடுள்ளவர்கள் இப்படி பதில் தரலாம். "உழைப்பது சாப்பிடத்தான். சாப்பிடுவது உழைக்கத்தான். ஆனால் சுவையின் காரணமாக அதீதமாக சாப்பிடும் உணவு, பின் விளைவுகளாக சில நேரங்களில் வயிற்றுக்கு சேராமல் போகலாம் இல்லையா"... அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பணி இடத்தில் வயிற்று உபாதை தர்மசங்கடமான ஒன்று தானே. எது தேவை, எவ்வளவு தேவை என்கிற வரையறை நமக்கு நிச்சயம் தேவை.
இன்று பரவலாக, தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதனால் நிகழும் அனர்த்தங்கள் பற்றி பேசுகிறோம். "ஒரு நிகழ்ச்சி விடாம்ம பார்க்கணும்மா. எதை பார்க்கணும், எதை பார்க்கக்கூடாதுன்னு ஒரு சுய கட்டுப்பாடு வேண்டாமா" என்று பேசுகிறோம். முக்கியமாக குழந்தைகள், இதனால் பாதிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்காக வேணும் நாம் சுய கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவசியம் சுயகட்டுப்பாட்டை சொல்லி கொடுப்பது நல்லது.
முக்கியமான நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடியும் தருவாயில் இருக்கும் போது, முக்கியமான வேலை வருகிறது. நீங்கள் வேலையை பார்ப்பீர்களா... தொலைக்காட்சியை பார்ப்பீர்களா... இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டி ஒன்றின் நாற்பத்தி ஆறாவது ஓவர் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது. அப்போது தான் உங்களுக்கு மிக முக்கியமான பணி வருகிறது. அப்போது நாம் என்ன செய்வோம். மனிதர்கள் இங்கேயும் இரண்டு அணிகளாக பிரிகிறார்கள்.
சுய கட்டுப்பாடுடன் இருப்பவர், உடனடியாக தம் வேலையை பார்க்க கிளம்புவார். "கிரிக்கெட்டா சோறு போடுது. ஹைலைட்ஸ் பார்த்தா போதாதா" என்பார். மாற்று சிந்தனையாளரோ, "நான்கு ஓவர் தானே பாக்கி இருக்கு. ஹைலைட்ஸ், லைவ் மாதிரி வருமா. இதப் பார்த்துட்டு போனா குடியா முழுகிடும்" என சொல்லலாம்.
குடி முழுகாது. ஆனால் எந்த செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு என்பதற்கேற்ப நிகழ்ச்சியை பார்த்துவிட்டு போன சில நிமிஷ தாமதங்களால், நம் வேலை சின்ன சின்ன இடர்பாடுகளை சந்திக்கலாம். சந்திக்காமலும் இருக்கலாம். ஆயினும், நாம் சுய கட்டுப்பாடுடன் இருக்கிறோம் என்பதில் நமக்கே பெருமையாக இருக்கும். நம் குழந்தைகளுக்கு நாம் முன் மாதிரியாக இருக்கும் பட்சத்தில், நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள்.
நாம் சுய கட்டுப்பாடுடன் இல்லாமல், பிறரை அப்படி இருக்க சொல்லி வலியுறுத்த முடியாது. சுய கட்டுப்பாட்டை ஒவ்வொரு விஷயத்திலும் நாம் பேண வேண்டும். முதலில் கஷ்டமாக தான் இருக்கும். சுய கட்டுப்பாட்டை பேணாத ஒவ்வொரு விஷயமும், கண்ணுக்கு முன்னாலேயே, ஆனால் கண்ணுக்கு புலப்படாத -நமக்கே பாதகமாக முடியக்கூடிய தவறான விஷயங்களாகவே இருக்கின்றன. நம்மால் அவற்றை உணர முடிவதில்லை.
நம்மில் பலரும் விடுமுறை நாட்களில், வேலை நாட்களில் இருப்பது போல் இருப்பதில்லை. முந்தைய தினம் வெகு நேரம் விழித்திருந்து, மறு நாள் மிக தாமதமாக விழிப்போம். இதை தவறென்று சொல்ல முடியாது. அதே நேரம் சரியென்றும் சொல்ல முடியாது. பணியின் காரணமாக, இரவில் கண் விழிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் "நாளை விடுமுறை தானே. வேகமாக விழித்து என்ன செய்ய போகிறோம்" என்று விழித்திருத்தலை தவிர்ப்பது நல்லது.
இங்கேயும் சுய கட்டுப்பாடு தேவையாக வருகிறது. தூக்கத்தை கெடுத்து கொண்டு கண் விழித்தலினால் நிகழும் உடற் கேடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு சோம்பலை வளர்த்து, வேலை நாட்களிலும் அப்படியே இருக்க சொல்லும்.
இன்று பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிறோம். இன்று கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் வாழ்வது இயலாத காரியம் என்கிற அளவுக்கு கெட்ட பழக்கங்கள் வருவதற்கான சூழல், எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.நண்பர்களால் கெடுவதாக சொல்கிறோம். சுய கட்டுப்பாடில்லாத மனிதர்களே கெடுகிறார்கள். ஆனால் நண்பர்களை பலிகடாவாக்குகிறோம். மன மற்றும் சுய கட்டுப்பாடிருப்பின் ஆண்டவனே சொன்னாலும் கேட்க மாட்டோம்.
மனிதருக்குள்ள நல்ல பழக்கங்கள் என்று நாம் ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் சுய கட்டுப்பாடு வராது. ஆனால் வர வேண்டும். மிக பெரிய வெற்றி பெற்ற அனேகம் பேர் சுய கட்டுப்பாட்டில் ஜெயித்தவர்களாகவே இருப்பார்கள்.
நன்றி : தமிழ் உதயம்
http://tamiluthayam.blogspot.com/2011/04/blog-post.html
No comments:
Post a Comment