லட்சியமும் வழிமுறையும்
=========================
''எல்லாரும் இன்புற்று வாழ வேண்டும்'' என்ற உயர்ந்த இலட்சியத்தைக் கொண்ட காந்தியடிகள், அந்த இலட்சியத்தை அடையும் வழிமுறையும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று கருதினார். சத்தியம் என்ற இலட்சியத்தை அடைய அஹிம்சை என்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டுமென்று கருதினார். வாயினால் கூறியதோடு மட்டுமில்லாமல் தனது வாழ்க்கயில் பின்பற்றி, வழிமுறையின் தூய்மை எப்படி இருக்க வேண்டுமென்பதையும் காட்டினார்.
இதனால்தான் புகழ்பெற்ற உலக வரலாற்று ஆசிரியரான டாயின்பி என்பவர் 'காந்தியடிகள் இந்த உலகில் எத்தனையோ சாதனைகள் செய்திருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மகுடம் போலத் தோன்றும் சிறப்பான சாதனை இந்த நூற்றாண்டின் இலட்சியத்தை விட வழிமுறையே மிக முக்கியமானது' என வாழ்க்கையில் பின்பற்றி நிரூபித்ததுதான்' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
காந்திய வழிமுறை நேர்மையான முறையில் உயர்ந்தனவற்றைப் பெற வேண்டுமென்று கற்றுத் தருகின்றது. எந்த விதை போடுகின்றோமோ அந்தச் செடிதான் முளைக்கும். வினை விதைத்துவிட்டு தினையை அறுக்க முடியாது. ஆதலால் இலட்சியத்தில் கவனம் செலுத்துவதைப் போன்றே வழிமுறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சத்தியக்கிரகம் :
=============
உயர்ந்த இலட்சியத்தை கொண்டவர்களால் அநீதியைக் கண்டு பேசாமல் இருக்க முடியாது. பொதுவாக சமுதாயத்தில் தீமை நடைபெறுகின்ற பொழுது மக்கள் மூன்று வழிகளில் நடந்து கொள்ளலாம். முதலாவது தீமைக்கு பணிந்து போவது - இது கோழைத்தனம். இரண்டாவது, தீமையை எப்படியாவது வன்முறையின் மூலமாவது - எதிர்த்து வெற்றி பெற முயல்வதாகும். மூன்றாவதாக தீமையை அறவழியில் எதிர்ப்பதாகும். காந்தியடிகள் மூன்றாவது முறையையே விரும்பினார். இதனையே சத்தியாக்கிரகம் என்ற புதிய போர்முறையை உலகிற்கு வழங்கினார்.
காந்தியடிகளின் கண்டுபிடிப்புகளில் தலைசிறந்ததான சத்தியாக்கிரகம் தீமை செய்யும் மனிதனை வெறுக்காமல் தீமையை மற்றும் அகற்றும் வழிமுறையை நமக்கு கற்றுத்தருகின்றது. அன்பின் மூலம் எதிரியை வெற்றி கொள்ளும் அஹிம்சைப் போராட்ட நெறிமுறை புதிய உலகை உருவாக்கத் துணை செய்யும்.
எளிய வாழ்க்கையும் உயரிய சிந்தனையும்
================================
தானே விரும்பி முயன்று தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்கின்ற மனிதன் உயர்ந்த சிந்தனையோடு வாழ்கின்ற பொழுது சமுதாயம் நெறியப்படுகின்றது. பற்றாக்குறையுள்ள ஏழ்மை வாழ்க்கை சமுதாயத்தில் இருக்கக் கூடாது. அதேபோல் ஆரவாரமிக்க போலி ஆரம்பர வாழ்க்கையும் நல்லதல்ல. இன்றியமையாத அடிப்படைத் தேவைகளைப் பெற்று மனநிலைவோடு வாழ்கின்ற எளிய வாழ்க்கை ஆன்மீக வளர்ச்சிக்கு துணை செய்யும். அத்தகைய வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் ஒளிவிடக்காணலாம்.
உடல் உழைப்பு :
==============
''எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும்'' கொண்டவர்கள் தங்களது தேவைகளை உழைத்தே பெறுவார்கள். இன்றைய சமுதாயத்திலுள்ளசொத்து, வருவாய் ஏற்றத்தாழ்வின் காரணமாகப் பலர் உழைத்து வாட, சிலர் உழைக்காமல் உண்டு களிப்பதனைக் காண்கிறோம். இதனாலேயே சமுதாயத்தில் வெறுப்புகளும் போராட்டங்களும் ஏற்படுகின்றன. எல்லோரும் உழைத்து வாழ்கின்ற சமுதாய அமைப்பில் சுரண்டலுக்கு இடமிருக்காது. அன்பால் எல்லோரும் இணைந்து வாழ்கின்ற சமுதாய அமைப்பு முறை உருவாகும்.
- டாக்டர் மா.பா.குருசாமி
காந்தியின் கடவுள் - பெரியார்
=============================
உங்கள் அனைவரும் தெரியும் காந்தியார் ஒரு நாஸ்திகர் அல்லவென்று.அவர் கடவுளைப்பற்றிய தமது கருத்தைப் பல முறை வெளியிட்டிருக்கிறார். சாதாரண மக்கள் அறிந்துகொள்ளக் கூடிய தன்மையில் கடவுளைப்பற்றித் தனது கொள்கை என்ன என்று அவர் கூறியிருப்பது இசைத்தட்டாக எடுக்கப்பட்டு இன்றும் இருக்கிறது. அதில் சுமார் 15 வருடத்திற்கு முன் "எனக்கு கடவுள் என்பதாக ஒரு வஸ்து இருக்கிறது என்பதில் நம்பிக்கை இல்லை" (I have no belief in personal God) என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் பின் ஏன் அவர் கடவுள் கடவுள் என்று சாகும்வரை கத்திக் கொண்டிருந்தார் ? என்று நீங்கள் கேட்கலாம். அவர் சத்தியத்தைத்தான், உண்மையைத் தான் கடவுள் என்று நம்பியிருந்தார். (Truth is God) அந்தச் சத்தியத்தைத்தான் அவர் மனிதன் பயப்படத் தக்கதென்றும், ஜாக்கிரதையாகப் பின்பற்றத் தக்கதென்றும் கூறிவந்தார்.கடவுள் தான் சத்தியம் என்று கூட அவர் கூறவில்லை. சத்தியமே கடவுள் என்றுதான் கூறினார். சத்தியந்தான் கடவுள், அன்புதான் கடவுள், அறிவுதான் கடவுள் என்று அவர் போதித்தார்.
பெரியார் - 22.02.1948
சத்தியாக்கிரகத்தின் சக்தி
===========================
சட்டத்தால், சட்டத்தை, சத்தியத்தின் வழியில் நின்று மீறுவதே,“சத்தியாக்கிரகம்”.
சத்தியாகிரகம் என்பது, தர்மத்துக்கு விரோதமான சட்டங்களை சட்டப்பூர்வமான முறையில் எதிர்த்து, அதற்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகும்.
நியாயமற்ற சட்டங்களுக்கும், உத்தரவுகளுக்கும் பணிவது ஆண்மையற்ற செயல் என்பதை நாம் உணர்ந்திருந்தால், எந்தச் சட்டமும், உத்திரவும் நம்மை ஒன்றும் செய்திட அல்லது அடிமைப்படுத்தி விட முடியாது.
தனது உடமைகள், போலி கௌரவம், உறவினர்கள், மரணம் என எதற்கும் அஞ்சாதவர்களே, சத்தியாக்கிரகத்தை பின்பற்றவும், வெற்றியடையவும் முடியும்.
சத்தியாக்கிரகியின் அகராதியில், “எதிரி” என்ற சொல்லே இருக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் பொய்ச் சொல்ல ஏமாற்ற, துன்புறுத்தக் கூடாது. தனது உயிரைத் துறந்தாகிலும், பிறரது உயிரைக் காக்க வேண்டும்.
சத்தியாக்கிரக கைதி, தனக்கும் சாதாரணக் கைதிக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதக் கூடாது. சிறையில், சிறப்புச் சலுகை எதையும் பெறக்கூடாது. சுயக்கட்டுப்பாட்டில், சக கைதிகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்.
ஒரு சத்தியாக்கிரகி, வெளியில் இருப்பதை விட, சிறைக்குள் இருக்கும்போதுதான், தனது லட்சியத்துக்கான தகுதியைப் பெறுகிறார். எந்த அளவிற்கு, அகிம்சையோடு சிறை விதிகளை மதித்து நடக்கிறாரோ, அந்த அளவிற்கு கொள்கையில் உயர்வார்.
அகிம்சை என்பது, ”இம்சையை அறிந்தே அனுபவிப்பது”.
ஒத்துழையாமை என்பது, ”அநீதிக்கு ஒத்துழைக்காமல் இருப்பது”.
பலமும், அறிவும் உள்ள ஒரு சத்தியாக்கிரகி, தானே முன்வந்து அநீதிக்கு ஒத்துழைக்காது, இம்சைகளை ஏற்பதால் மட்டுமே, நீதியைக் காக்கவும், அவதூறுகளைப் போக்கவும் முடியும்.
சத்தியாக்கிரகம் ஒன்றே, சமத்துவம், சமாதானம், சமநீதிக்கான சரியான வழி.
மற்றவை எல்லாம் அழிவுக்கான வழியே; பகையே!
ஆதாரம்: மகாத்மா காந்தி 1924 ஆம் ஆண்டு எரவாடா சிறையில் இருந்த போது எழுதிய, சத்தியாக்கிரகம் என்னும் நூலில் இருந்து ஒருங்கிணைத்தும், சுருக்கியும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.
வருமானத்தில் சமத்துவம்
=========================
உலகமெல்லாம் கண்டு பொறாமைப்படக்கூடிய அளவுக்கு இந்தியா ஒரு முன்மாதிரியான சுதந்திர வாழ்கை நடத்த வேண்டுமென்றால், இங்குள்ள தோட்டிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், மற்றவர்கள் ஆகிய எல்லோரும் அன்றாடம் செய்யும் நாணயமான உழைப்பிற்கு ஒரே சமத்துவமான ஊதியம் பெறவேண்டும். இந்திய சமுதாயம் ஒரு போதும் இந்த இலட்சியத்தை எட்டாமல் இருக்கலாம். ஆயினும் இந்தியா மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு இந்தியனும் இந்த இலட்சியத்தை நோக்கியே பயணப்படவேண்டும்.
- ஹரிஜன் 16-3-1947
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்திலேயே இதை செயல்படுத்தியவர் காந்தி. 1904 இல் தென்னாப்பிரிக்க சைவ உணவு விடுதியில் அறிமுகமான போலக் விரைவிலே காந்தியின் நண்பரானார். போலக்”கிரிடிக்” என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். காந்தி “இந்திய ஒப்பீனியன்” என்றொரு பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார்.ஒரு சமயம் நோட்டாலுக்கு செல்லவிருந்த காந்தியை வழியனுப்ப வந்த போலக் பிரயாணத்தின் போது படிக்க ஜான்ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் 'கடைத்தேற்றம்' என்ற நுாலைக் கொடுத்தார்.
ஜோஹானஸ்பர்க்கில் இருந்து டர்பனுக்கு புகைவண்டியில் காந்தி பயணப்பட்ட அந்த இரவு அவரின் வாழ்வைப் புரட்டிப் போட்டது எனலாம். காந்தி தனது லட்சியவாத வாழ்வை தொடங்கினார். ரஸ்கினுடைய அந்நூலை பின்னர் “சர்வோதயம்(சர்வஜன நலம்) என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார் காந்தி. ரஸ்கினுடைய நூலில் கூறப்பட்ட பிரதான செய்தியாக காந்தி மூன்று விசயங்களை வரிசைப்படுத்தினார்.அவை
1) எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது
2) தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால்,முடி திருத்தும் தொழிலாளிக்கு இருக்கும் அதே மதிப்புத்தான் வக்கீலின் வேலைக்கும் உண்டு.
3) நிலத்தில் உழுது பாடுபடும் பாட்டாளியின் வாழ்க்கையும் குடியானவரின் வாழ்க்கையும் கைத்தொழிலில் செய்பவனின் வாழ்க்கையுமே ஆகக்கூடிய மேன்மையான வாழ்க்கை......
டர்பன் நகரத்துக்கு வெளியே போனிக்ஸ் பண்ணையை ஆரம்பித்தார். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கையை அங்கிருந்து கொண்டு இயக்க ஆரம்பித்தார்கள். தொழிலாளர்கள் அனைவருக்கும் பாகுபாடற்ற மாதாந்திர சம்பளமாக 3 பவுண்ட் வழங்கப்பட்டன. தமது உணவை தாமே பயிர் செய்து கொள்ள சிறிதளவு நிலமும் ஒதுக்கித்தரப்பட்டன. தோட்டி வேலை முதலிய அனைத்தையும் தாமே செய்து கொள்ளவேண்டும்.
பிறப்பினாலோ, செய்யும் தொழிலாலோ எந்த வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கும் சர்வோதயம் இடமளிக்கவில்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக வாழும் முறையைச் சர்வோதயம் வலியுறுத்துகிறது. சர்வோதய சமுதாயத்தில் அன்பே முதற்பொருளாகும். சர்வோதய சமுதாயத்தில் சமயச் சமத்துவம் நிலைநாட்டப்படும். சமய வேறுபாடுகளுக்கு அச்சமுதாயத்தில்இடமில்லை
-ராட்டை
ஆதாரம் :
1) சத்திய சோதனை
2)தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்
3) சர்வோதயம் - மா.ப.குருசாமி
4)கிராம சுயராஜ்யம்
5) ஹரிஜன் 16-3-1947
நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி," "இது கடினம். ஆனால் நம் எதிர்தரப்பினரின் பார்வையை நம் பார்வையாகக் கொண்டால்தான் அவர்களுக்கு நம்மால் முழுமையாக நீதி வழங்க முடியும். இதற்கு விருப்பு வெறுப்பற்ற மனநிலை தேவைப்படுகிறது என்பதை நான் அறிகிறேன். அந்த மனநிலையை அடைவது எளிதல்ல. ஆனாலும், ஒரு சத்தியாகிரகிக்கு இந்த மனநிலை ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும்"
---------------------
இந்த சமூகத்திற்கு உங்கள் செய்தி என்ன பாபுஜி...?
என் வாழ்க்கை...! - இது காந்தி ஜி.
எவ்வளவு வலிமையான வார்த்தைகள் இது.
எவ்வளவு பேசி... எவ்வளவு எழுதி... என்ன ஆகி விடப்போகிறது... வாழ்ந்து காட்டுவது தானே உன்னதம்...
சில முரண்பாடுகள் இருந்தாலும்... காந்தி ஜி... நீங்களே எனக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறீர்.
No comments:
Post a Comment