நூல் பல கற்பதனால் ஏற்படும் செருக்கே உண்மையை அடைவதற்கு தடை!
மக்கள் மனைவி முதல் மற்றவர்கள் அற்பமதி
மக்கட்கு ஒரு குடும்பம் ஆனவே – மிக்க கல்வி
உள்ளவர் தம் உள்ளத்தே ஒன்று அல பன்னூல் குடும்பம்
உள்ளது யோகத்தடையாய் ஓர்
குழந்தைகள், மனைவி முதலான உறவினர்கள் அற்பமதி உள்ள சம்சாரிகளுக்கு ஒரு குடும்பமாக இருப்பது போல, மிகுந்த கல்வி அறிவு பெற்றவர்களுடைய மனதின் உள்ளே ஒன்று அல்ல, பலவிதமான நூல்களாகிய குடும்பங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே யோகத்திற்குத் தடை என்று உணர்வாய்.
உலகியலில் ஈடுபட்டுள்ள சம்சாரிகள் தாம் கடைத்தேற வழி ஒன்று உண்டு என்று தெளிந்து, அதனை நூல்கள் மூலமாகவும் அதை நன்கு விளக்கி வழிகாட்டும் ஆன்றோர்கள் மூலமாகவும் தங்களது முயற்சியைத் தொடங்குகின்றனர். அதுவரை அவர்கள் தனது மனைவி, மக்கள் உள்ளிட்ட குடும்பம் பந்தமாக இருந்தாலும், அவர்களை வழி நடத்தும் செய்கையிலேயே தாங்கள் கடைத்தேற முடியும் என்றும் தெளிகின்றனர். அப்படி அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தெளிவதற்கு உதவிய நூல்களும், அவர்கள் மேற்கொள்ளும் வழிகளுமே சில சமயம் தடையாக இருக்கலாம்.
நூல்களை கற்றுணர்ந்ததால் தாம் பண்டிதர்கள் என்றும், மற்றோர் அறியாதவர்கள் என்றும் அவர்கள் மனதில் தோன்றக்கூடும். அது தவிர தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று உலகத்தில் உழன்று வந்தவர்கள் இப்போது தன்னையும், உலகையும் தவிர நூல்களில் சொல்லப்பட்டுள்ளகருத்துக்களினால் கவரப்பட்டு அவைகளைச் சுற்றிலும் புதிய உலகங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
அதைத் தெரிந்து கொண்டதால் அதைக் காட்டிக்கொண்டு ஒரு மேதமையையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதனால் தாம் மேற்கொள்ளும் வழி ஒன்றே சரியானதென்றும், மற்ற வழிகள் எல்லாம் நம்மதைவிட தாழ்ந்தவை என்றும் தோன்றலாம். அல்லது நாம் செல்லும் வழிகளில் உள்ள முறைகளில் மட்டும் கவனம் சென்று, எதற்காக அம்முறைகள் சொல்லப்பட்டுள்ளன என்ற அறியாமையினாலும் நாம் தடம் புரளலாம்.
இவை அனைத்துமே நாம் அடக்க நினைக்கும் அகங்காரமானது தூல வடிவினை விட்டு நூல்களைக் கற்றதன் பயனாய் நுண்ணிய வடிவினை எடுப்பதன் விளைவுகளே. ஆக எது நமக்கு உதவும் என நினைத்து அதன் துணையை நாடுகிறோமோ அதுவே நமது முன்னேற்றத்துக்குத் தடையாக அமையலாம். தடைகள் என்று கூடத் தெரியாத அளவுக்கு அவர்களின் நூற்கல்வி அவர்கள் புத்தியை மழுங்கடிக்கலாம்.
அதனால் ஒரு குடும்பம் என்ற நிலை போய், பல நூல்களின் தாக்கத்தால் பல குடும்பங்கள் என்ற வேண்டத்தகாத நிலை வரலாம். நூல்களைக் கற்பதனாலேயே ஒருவன் ஞானி ஆக முடியாது. உலகியலிலும் கசடறக் கற்றபின் அதற்குத் தக நின்றால்தான் ஒருவன் அறிவாளி ஆக முடியும். இல்லையென்றால் அவன் ஒரு வாய்ச் சொல் வீரனாகத்தான் இருக்க முடியும்.
அதனாலேயே ஆன்மீக உலகில் சாதகன் ஒருவனுக்கு ஒரு குருவின் வழிகாட்டுதல் இன்றியமையாது ஆகிறது. எப்போதும் உள்ளது என்றாலும், முக்கியமாக அப்போது இறைவனின் அருளும் சாதகனுக்கு மிக அவசியம். ஆக முடிவான நிலையை உணர முயற்சிக்கும் சாதகனுக்கு துணிவு என்பதோடு பணிவு என்பதும் வேண்டும்.
புதுமைபித்தன் FB
No comments:
Post a Comment